ADDED : செப் 19, 2024 11:02 PM

ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், கர்நாடகாவின் யஷஸ்வினி கோர்படே கோப்பையை கைப்பற்றினார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் காங்ரா கிராமத்தில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. அரை இறுதியில், தமிழகத்தின் செலினா தீப்தி செல்வகுமார், கர்நாடகாவின் யஷஸ்வினி கோர்படே மோதினர்.
முதல் சுற்றில் செலினா தீப்தி செல்வகுமார் சிறப்பாக விளையாடினார். அடுத்த 3 சுற்றுகளில் யஷஸ்வினி கோர்படே தொடர்ந்து முன்னிலை வகித்தார். இறுதி சுற்றில் மீண்டும் தமிழக வீராங்கனை முன்னிலை வகித்தார்.
அதாவது, 2 - 11, 11 - 9, 11 - 6, 11 - 8, 13 - 11 என்ற கணக்கில் கர்நாடக வீராங்கனை வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இறுதி போட்டியில், பி.எஸ்.பி.பி., ரீத் ரிஷ்யாவை, கர்நாடக வீராங்கனை எதிர்கொண்டார். 12 - 10, 11 - 5, 11 - 4, 4 - 11, 12 - 10 என்ற கணக்கில், யஷஸ்வினி கோர்படே வெற்றி பெற்றார்.
இவருக்கு, பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக விளையாடி, தங்கப்பதக்கம் வெல்வதே தன் இலக்கு என்று தெரிவித்துள்ளார்
- நமது நிருபர் -.