அர்த்தமற்ற வாக்குறுதி திட்டங்கள் எடியூரப்பா குற்றச்சாட்டு
அர்த்தமற்ற வாக்குறுதி திட்டங்கள் எடியூரப்பா குற்றச்சாட்டு
ADDED : மார் 16, 2025 11:38 PM

பெலகாவி: ''காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு, எந்த அர்த்தமும் இல்லை. மக்களை திருப்திப்படுத்த திட்டங்களை அறிவித்தனர். ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றம் சாட்டினார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தற்போது பா.ஜ.,வின் சூழ்நிலை நன்றாக உள்ளது. வரும் நாட்களில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வருவது, நுாறுக்கு நுாறு சதவீதம் உறுதி. அதற்காக ஒற்றுமையாக செயல்படுகிறோம்.
பா.ஜ., தலைவர்களுக்கு ஆலோசனை கூற, எதுவும் இல்லை. அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். வட மாவட்டத்துக்கு, நான் முதல்வராக இருந்த போது கொடுத்த முக்கியத்துவத்தை, இன்றைய அரசு கொடுக்கவில்லை. இது அனைவருக்கும் தெரியும்.
பணிகளின் ஒப்பந்தத்தில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது சரியல்ல. இது குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதில் பொது மக்களுக்கும் உடன்பாடு இல்லை. இதை உச்சநீதிமன்றம் பார்த்து கொள்ளும்.
காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு, எந்த அர்த்தமும் இல்லை. மக்களை திருப்திப்படுத்த திட்டங்களை அறிவித்தனர். ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை.
மாநிலத்தில் 'துக்ளக் தர்பார்' நடக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் நடத்துகின்றனரோ நடத்தட்டும். வட மாவட்டங்களின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு, காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.