ADDED : நவ 28, 2024 11:58 PM
பெங்களூரு; முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான 'போக்சோ' வழக்கின் விசாரணை, வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 81. உதவி கேட்டு சென்ற பெண்ணின் மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எடியூரப்பா மீது, போக்சோ வழக்கு பதிவானது.
இந்த வழக்கில் அவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, எடியூரப்பா உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ரவிவர்மா, 'இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருப்பது விசாரணையை தாமதப்படுத்துகிறது. வழக்கை வேகமாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்' என்றார்.
எடியூரப்பா தரப்பில் ஆஜரான வக்கீல், தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகரத்னா, மனு மீதான விசாரணையை வரும் டிச., 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.