பகவந்த் கூபாவுக்கு எதிர்ப்பு எடியூரப்பா நாளை சமரச பேச்சு
பகவந்த் கூபாவுக்கு எதிர்ப்பு எடியூரப்பா நாளை சமரச பேச்சு
ADDED : பிப் 07, 2024 11:02 PM

பெங்களூரு: பீதர் எம்.பி.,யான பகவந்த் கூபாவுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் தலைவர்களுடன் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நாளை சமரச கூட்டம் நடத்தவுள்ளார்.
லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் தற்போதைய எம்.பி.,க்கள் சிலர், இம்முறையும் சீட் எதிர்பார்க்கின்றனர். இதில் மத்திய உரம் துறை அமைச்சரும், பீதர் எம்.பி.,யுமான பகவந்த் கூபாவும் ஒருவராவார். இவருக்கு தொகுதியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை மீறி சீட் கொடுத்தால், தொகுதியில் பின்னடைவு ஏற்படும் என, பா.ஜ., அஞ்சுகிறது.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் முன்பு, உள்ளூர் தலைவர்களுடன் சமாதானம் பேச்சு நடத்த, முன்னாள் முதல்வர் எடியூரப்பா முன் வந்துள்ளார். நாளை பீதருக்கு செல்லும் அவர், காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, பீதர் லோக்சபா தொகுதியின் மக்கள் பிரதிநிதிகள், தலைவர்களுடன் கூட்டம் நடத்தவுள்ளார்.
எம்.எல்.ஏ.,க்கள் பிரபு சவ்ஹான், சரணு சலகரா உட்பட, பலர் பகவந்த் கூபாவுக்கு சீட் கொடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இவர்களுடன் எடியூரப்பா சமாதானம் பேச்சு நடத்துகிறார்.

