இடுக்கியில் 'எல்லோ அலர்ட்' : வானிலை மையம் எச்சரிக்கை
இடுக்கியில் 'எல்லோ அலர்ட்' : வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : நவ 19, 2025 06:36 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் இன்று (நவ.19) பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
இம்மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
உப்புத்தரா அருகே புன்னப் பாறை பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்னல் தாக்கி இருவர் பலத்த காயம் அடைந்த நிலையில், ஒரு வீடு சேதமடைந்தது.
இந்நிலையில் மாவட்டத்திற்கு நேற்று பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த நிலையில் இன்றும் எல்லோ அலர்ட் விடுத்துள்ளது. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
குறைவு: இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்த பிறகு வடகிழக்கு பருவ மழை இதுவரை 34 சதவீதம் குறைவு என தெரியவந்தது. மாவட்டத்தில் அக்.1 முதல் நேற்று முன்தினம் காலை வரை 322.2 மி.மீ., மழை பெய்தது. இதே கால அளவில் கடந்தாண்டு 487.3 மி.மீ., மழை பதிவானது. மூணாறில் நேற்று சாரல் மழை பெய்த நிலையில், அவ்வப்போது மிதமான மழை பெய்தது.

