ஜெயநகர் தொகுதி புறக்கணிப்பு ஆமாம் என்கிறார் சிவகுமார்
ஜெயநகர் தொகுதி புறக்கணிப்பு ஆமாம் என்கிறார் சிவகுமார்
ADDED : நவ 21, 2024 05:24 AM

பெங்களூரு: ''ஜெயநகர் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி பொய்யான தகவல் கூறியதால், அத்தொகுதிக்கு வேண்டும் என்று தான், நான் நிதி ஒதுக்கவில்லை,'' என, பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மக்களுக்கு நல்லது செய்யும் வகையில், ஆட்சி நடத்துகிறோம். எங்கள் அரசை பற்றி குறை சொல்ல பா.ஜ., தலைவர்கள், மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு தகுதி இல்லை.
குமாரசாமி முதல்வராக இருந்தபோது செய்தது என்ன? அவர் காலத்தில் மக்களுக்கு அநியாயம் தான் நடந்துள்ளது.
அரசு ஊழியர்களும் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் வைத்துக் கொண்டு சலுகைகள் பெறுகின்றனர். இதனால் பி.பி.எல்., கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்துகிறோம்.
ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டு சொல்கின்றன.
நாங்கள் கொடுத்த ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். எங்கள் வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி குறை சொல்கிறார்.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எப்போது?
கர்நாடகா மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க உங்களுக்கு இடம் தேவைப்பட்டால் சொல்லுங்கள். இடம் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.
ஜெயநகர் தொகுதிக்கு வேண்டும் என்று தான், நான் நிதி ஒதுக்கவில்லை. 'சிவகுமார் பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆன பின், பெங்களூரு நகரம் அதோ கதி ஆகிவிட்டது' என, ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி பொய் தகவல் பரப்பினார்.
ஜெயநகர் மக்கள் சந்திக்கும் பிரச்னை என்ன என்பது, எனக்கு தெரியும். அந்த மக்களை நாங்கள் கைவிட மாட்டோம். இந்த விஷயத்தில் பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

