ADDED : ஆக 12, 2025 03:10 AM
பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தும் நோக்கில், என்.பி.எஸ்., எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம், 2004, ஜனவரி 1க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், தங்களுடைய சொந்த விருப்பத்தின் கீழ், யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
யு.பி.எஸ்.,யில் இணையும் அரசு ஊழியர்கள், பணியின்போது இறந்தாலோ, ஊனமுற்றாலோ அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டாலோ பண பலன்களை பெறலாம். இத்திட்டத்தில் இணைய, மத்திய அரசுப் பணியில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையாற்றி இருக்க வேண்டும்.
இதேபோல் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு, கடைசி 12 மாதங்களின் சராசரி சம்பளத்தில், 50 சதவீதம் உத்தரவாத ஓய்வூதியமாக வழங்கப்படும்.
எனவே, யு.பி.எஸ்., திட்டத்தில் உள்ளவர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை கோர முடியாது. இதனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எந்த திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
2.17 லட்சம் கள்ள நோட்டுகள்
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கடந்த 2024 - 25 நிதியாண்டில் மொத்தம் 2.17 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், அதிகபட்சமாக 1,17,722 எண்ணிக்கை உள்ள, 500 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன. அதுபோல, 200 ரூபாய் நோட்டுகளில், 32,660 நோட்டுகளும், 100 ரூபாய் நோட்டுகளில் 51,069 நோட்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளன.
முந்தைய, 2023 - 24 நிதியாண்டில், 2.23 லட்சம் கள்ள நோட்டுகள் பிடிபட்டன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.