UPDATED : ஜூலை 20, 2026 09:55 PM
ADDED : ஜூலை 20, 2026 09:44 PM
ராஜ்யசபாவில் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் கூறியதாவது:
சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இந்த ஆண்டு ஜூன் 30 வரை 1,331 வணிக விமானிகளுக்கான லைசென்ஸ்களை விநியோகித்துள்ளன. இதில் 791 பேர் இந்திய விமான பயிற்சி மையங்களிலும், 540 பேர் வெளிநாட்டு மையங்களிலும் பயிற்சி பெற்றவர்கள். கடந்த ஆண்டு 1,652 பேருக்கும், 2024ம் ஆண்டில் 1,347 பேருக்கும் இந்த லைசென்ஸ்கள் விநியோகிக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை நிலங்கள் தாரை வார்ப்பு
லோக்சபாவில் மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் கிர்த்தி வரதன் சிங் கூறியதாவது:
நாட்டின் மொத்த வனப்பரப்பு 8,27,357.95 சதுர கி.மீ.,யாக அதிகரித்துள்ளது. தொழிற்சாலை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்காக கடந்த 2016 ஏப்ரல் 1 முதல், இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான 10 ஆண்டுகளில் வனத்துறைக்கு சொந்தமான 4 லட்சத்து 64 ஆயிரத்து 557 ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன.
இது டில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் அளவை விட அதிகம். 2025- - 26 நிதியாண்டில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க எடுத்துக்கொள்ளப்பட்ட சராசரி காலம் 57 நாட்களாக இருந்தது. இது 2006ல் நிர்ணயிக்கப்பட்ட 105 நாட்கள் என்ற சட்டரீதியான காலக்கெடுவை விடக்குறைவு.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு
லோக்சபாவில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது:
நம் நாட்டுக்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கடந்த 2014ல் 1.31 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2024ல் 2.06 கோடியாக உயர்ந்துள்ளது. இது 56.93 சதவீத வளர்ச்சி. 2024ம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணியர் வருகை அடிப்படையில் முதல் ஐந்து இடங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 10.2 கோடி பேருடன் முதல் இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை 9.38 கோடி பயணியருடன் ஸ்பெயினும், மூன்றாம் இடத்தை 7.23 கோடி பேருடன் அமெரிக்காவும், நான்காம் இடத்தை 60.6 கோடி பேருடன் துருக்கியும் ஐந்தாம் இடத்தை 5.77 கோடி பேருடன் இத்தாலியும் பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
