காப்பீடுக்கு ஜி.எஸ்.டி., குறையுமா?
லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதில்:
ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடு மீதான ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் உள்ள சிக்கல்களை முழுமையாக ஆராய, அமைச்சர்கள் குழுவை நியமிக்க, செப்., 9ல் நடந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைத்தது.
இந்த விவகாரம், அமைச்சர்கள் குழு முன் நிலுவையில் உள்ளது. ஒருவேளை, காப்பீடுகள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரியை குறைக்கும்படி கவுன்சில் பரிந்துரைத்தால், பிரீமியம் தொகை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காத்திருப்பு பட்டியல் ரயில்வே அமைச்சர் விளக்கம்
கடந்த மூன்று ஆண்டுகளில், ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல், காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுடன் பயணித்த பயணியரின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு ரயில்வே செய்து கொடுத்த வசதிகள் குறித்து ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ராஜ்யசபாவில் நேற்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுடன் முன்பதிவு அல்லாத பெட்டியில் பயணித்தவர்களின் விபரங்ளை ரயில்வே நிர்வாகம் பராமரிப்பது இல்லை. ஆனால், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் இயக்கி உள்ளது,'' என்றார்.
கடலோர கப்பல் மசோதா தாக்கல்
கடலோர வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் வணிகத் தேவைகளுக்காக இந்திய குடிமக்களுக்கு சொந்தமான கப்பல்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் மசோதா லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்தியக் கப்பல்கள் அல்லாத பிற கப்பல்கள் உரிமம் இல்லாமல் கடலோர வர்த்தகம் செய்வதைத் தடுக்கவும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு உள்நாட்டுக் கப்பல்கள் கடலோர வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.