ADDED : டிச 13, 2024 12:36 AM

எதிர்க்கட்சிகள் அமளி முடங்கியது ராஜ்யசபா
காங்கிரஸ் மற்றும் பா.ஜ., உறுப்பினர்களின் தொடர் அமளியால், ராஜ்யசபா நேற்று நாள் முழுதும் முடங்கியது.
உணவு இடைவேளைக்கு முன், சபையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அளித்த ஆறு நோட்டீஸ்களை, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் நிராகரித்தார்.
அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, மத்திய அமைச்சரும், பா.ஜ., உறுப்பினருமான நட்டா, கடுமையாக விமர்சித்து பேசினார்.
அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், காங்., - எம்.பி., சோனியாவின் அமைப்புக்கு நிதியுதவி வழங்குவது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனால், இரு தரப்பினரும் மோதிக் கொண்டதை அடுத்து, மதியம் 2:00 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் மீண்டும் சபை கூடியபின், திரிணமுல் காங்., - எம்.பி., டெரக் ஓ பிரையன் சபை நடவடிக்கை குறித்து பேச முயன்றார். ஆனால், அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைஅடுத்து, சபை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக தீர்மானம்
பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தன் பதவியை தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சாகரிகா கோஷ், அவருக்கு எதிரான தீர்மானத்தை ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார்.
பின் பார்லி., வளாகத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். அவர் பார்லிமென்ட் விவகார அமைச்சர். எனவே, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்வது அவரது பொறுப்பு.
''அவரோ, தொடர்ந்து எதிர்க்கட்சியினரை அவமதித்து வருகிறார். அவர், தன் பதவியை தவறாக பயன்படுத்துகிறார். இந்த விவகாரத்தில், அவர் எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.
