பலிகடா ஆக்கப்பட்ட யோகேஸ்வர்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல்
பலிகடா ஆக்கப்பட்ட யோகேஸ்வர்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல்
ADDED : அக் 25, 2024 11:00 PM

ராம்நகர்: ''சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் நிகில் வெற்றி பெறுவார். காங்கிரசில் இணைந்த யோகேஸ்வருக்கு சீட் கொடுத்ததால், அக்கட்சி தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர். யோகேஸ்வர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதியில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிகில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின், அசோக் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணாவில் போட்டியிட, அத்தொகுதி தொண்டர்களுடன் ம.ஜ.த., தலைவர் ஆலோசனை செய்து, நிகிலை தேர்வு செய்தனர். ஆனால் காங்கிரசில், எந்த கூட்டமும் நடத்தாமல், யோகேஸ்வரை தேர்வு செய்துள்ளனர்.
இதனால், அக்கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ்தொண்டர்களே ஆதரவு அளிப்பர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையம், முடா, எஸ்.சி., - எஸ்.டி., பணத்தில் முறைகேடுகளால், மாநில காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
தற்போது சுரங்க முறைகேட்டில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிக்கு நாளை (இன்று) தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ், கொள்ளையர்களின் கட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சுரங்க ஊழல் நடந்துள்ளது என்று சித்தராமையா நடனமாடினார்; பின்னர் கால் வலிக்கிறது என்று மசாஜ் செய்து கொண்டார்.
தற்போது சொந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., கொள்ளை அடித்து சிக்கிக் கொண்டார். சுரங்கங்களை சூறையாடியது காங்கிரஸ் கட்சி தான் என்பது மக்களுக்கு தெரியும்.
யோகேஸ்வருக்கு சீட் கொடுக்க முயற்சித்தோம். ஆனால், அவர் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துவிட்டார். பா.ஜ.,வில் மூத்த தலைவராக இருந்த அவர், தற்போது காங்கிரசில் மூன்றாவது வரிசையில் அமர்ந்துள்ளார்.
மக்களுக்கு நல்ல தலைமை தேவை. நிகில் வெற்றி பெறுவார் என்பது தெளிவாகிறது. அனைத்து பா.ஜ., தொண்டர்களும், தலைவர்களும் கடுமையாக உழைப்பர்.
இத்தொகுதி வளர்ச்சிக்கு, 16 மாதங்களாக ஒரு ரூபாய் கூட மாநில அரசு ஒதுக்கவில்லை. மழை பாதிப்பால் விவசாயிகள் பரிதவித்தாலும், இழப்பீடு வழங்க பணம் இல்லை. சம்பளம் கொடுக்க கூட, இந்த அரசு பரிதவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.