தேவகவுடாவை சந்தித்த யோகேஸ்வர் பெங்., ரூரல் தொகுதியை கேட்டாரா?
தேவகவுடாவை சந்தித்த யோகேஸ்வர் பெங்., ரூரல் தொகுதியை கேட்டாரா?
ADDED : பிப் 13, 2024 06:48 AM

பத்மநாப நகர்: ம.ஜ.த., தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, பா.ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் சந்தித்துப் பேசினார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளது. இதனால், ம.ஜ.த., முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரை பா.ஜ., தலைவர்கள் பலரும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, நேற்று பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக, தனது 'எக்ஸ்' வலைதளத்தில் யோகேஸ்வர் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகத்தின் பெருமை, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன். இந்த வயதிலும் நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மீது அவர் காட்டும் அக்கறை முன்னுதாரணமானது. தேவகவுடாவின்அறிவும், அனுபவமும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் ம.ஜ.த.,வின் மாநிலத் தலைவர் குமாரசாமிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரு ரூரல் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட காய் நகர்த்தி வரும் யோகேஸ்வர், தேவகவுடாவை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.