ADDED : நவ 24, 2024 11:06 PM

ஹாசன் மாவட்டம், ஆலுாரை சேர்ந்த போலீஸ் துறையில் பணியாற்றும் எஸ்.ஐ., பசவராஜு - ஏ.எஸ்.ஐ., சந்திரகலா ஆகியோரின் மகள் யோகிதா. டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
ஆலுாரில் யார் வீட்டிலாவது பாம்பு காணப்பட்டால், உடனடியாக, யோகிதாவுக்கு தான் அழைப்பு விடுப்பர். பாம்பு தென்பட்டால், பாம்பு பிடி நிபுணர்களை தானே அழைக்க வேண்டும்; ஏன் வழக்கறிஞரை அழைக்கின்றனர் என்று குழம்ப வேண்டாம்.
இவர், பாம்புகளை பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட்டு வருகிறார். இதுவரை ராஜநாகம் உட்பட 50க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார்.
இது தொடர்பாக, யோகிதா கூறியதாவது:
நான், 2019ல் பி.யு., படித்து கொண்டிருந்த போது, வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டது. அப்போது வீட்டில் இருந்த எனது தந்தை, 'நீ தைரியமாக பாம்பை பிடி. என்ன நடந்தாலும் நான் உன் பின்னால் இருப்பேன்' என்று கூறி உற்சாகப்படுத்தினார். நானும் தைரியமாக பாம்பை பிடித்தேன். அதில் இருந்து தொடர்கிறது.
பெரிய பாம்பின் வாலை பிடித்து துாக்கினால், அதன் இயக்கம் மந்தமாகிவிடும். சில சிறிய பாம்புகளை பிடிக்கும் போது, திரும்பி தாக்கி விடும்.
தவளையை தேடி வரும் பாம்புகள், வீட்டின் அருகே வருவது வழக்கம். எனவே, வீட்டின் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க வேண்டும்.
பாம்புகளை பார்த்தவுடன் கொல்லக்கூடாது. பாம்புகளின் நடமாட்டம், விவசாய துறைக்கு நன்மை தரும். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு, பாம்புகள் மிகவும் உதவியாக இருக்கும்.
பாம்புகளில் இருந்து சில மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
அதற்காகவே சில இடங்களில் வளர்க்கப்படுகின்றன. எந்த சூழ்நிலையிலும் பாம்புகளை கொல்லாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாம்புகளை பிடிக்கவோ அல்லது அவரை பாராட்டவோ, 63688 01567 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்
- நமது நிருபர் -.