தேசத்தின் விரல்களை வெட்டுகிறீர்கள்: லோக்சபாவில் ராகுல் பேச்சு
தேசத்தின் விரல்களை வெட்டுகிறீர்கள்: லோக்சபாவில் ராகுல் பேச்சு
UPDATED : டிச 14, 2024 04:25 PM
ADDED : டிச 14, 2024 03:31 PM

புதுடில்லி: '' தேசத்தின் விரல்களை வெட்டுவதில் பா.ஜ., அரசு மும்முரமாக உள்ளது, '' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறினார்.
அரசியலமைப்புச் சட்ட விவாதத்தில் பங்கேற்று ராகுல் பேசியதாவது: மஹாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் எண்ணங்கள் மற்றும் குரல்களை அரசியலமைப்பு மூலம் கேட்கலாம். அரசியலமைப்பு என்பது நவீன இந்தியாவின் ஆவணம். ஆனால், பழங்கால இந்தியா மற்றும் அதன் கொள்கைகள் இல்லாமல், இதனை எழுத முடியாது. மத்திய அரசு பணிகளில் 'லேட்டரல் என்ட்ரி' மூலம் ஆட்களை தேர்வு செய்து, நீங்கள் இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழைகளின் நம்பிக்கையை நீங்கள் வெட்டிவிட்டீர்கள்.
எனது முதல் பேச்சில் கொள்கைகளுக்கு இடையிலான மோதல் நடக்கிறது எனக்கூறி இருந்தேன். மஹாபாரதம், குருசேத்திரா போர் குறித்து விளக்கி இருந்தேன். இந்தியாவில் ஒரு மோதல் தற்போது நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில், அரசியலமைப்பு கொள்கை பாதுகாவலர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவர் உள்ளனர். எங்களை கேட்டால், தமிழகத்தில், ஈ.வெ.ரா., கர்நாடகாவில் பசவண்ணா, மஹாராஷ்டிராவில் அம்பேத்கர், குஜராத்தில் மஹாத்மா காந்தி என பெயரை சொல்லுவோம். இவர்களை நீங்கள் தயங்கி தயங்கி புகழ்கிறீர்கள். ஆனால், உண்மையில், இந்தியா முன்பு நடத்தப்பட்டதோ, அதேபோல் செயல்பட வேண்டும் என விரும்புகிறீர்கள். அரசு வேலைகளில் நடக்கும் முறைகேடுகள் மூலம் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஹாத்ராஸ் நகரில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல முடியவில்லை. அவர்களை நான் சந்தித்த போது, ' எங்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதாக உ.பி., அரசு வாக்குறுதி அளித்தது. நான்கு ஆண்டுகள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை' என என்னிடம் தெரிவித்தனர். தினமும் அவர்களை குற்றவாளிகள் அச்சுறுத்துகின்றனர்.
துரோணாச்சாரியார், ஏகலைவன் விரலை வெட்ட வைத்தது போல், நீங்கள் ஒட்டு மொத்த நாட்டின் விரலை வெட்டுவதில் மும்முரமாக உள்ளீர்கள். தாரவியை அதானியிடம் கொடுத்ததன் மூலம் தொழில்முனைவோர், சிறு குறு தொழில் முனைவோரின் விரலையும், இந்திய துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தொழில்துறையை அதானியிடம் ஒப்படைத்ததன் மூலம், இந்தியாவில் நேர்மையாக தொழில் செய்வோரின் விரல்களையும் வெட்டி உள்ளீர்கள். அக்னிவீர் திட்டம், வினாத்தாள் கசிவு மூலம் இந்திய இளைஞர்களின் விரலை வெட்டி உள்ளீர்கள்.
டில்லிக்கு வெளியே விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசுகிறீர்கள். அவர்கள் மீது தடியடி நடத்துகிறீர்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையை உங்களிடம் விவசாயிகள் கேட்கின்றனர். உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. ஆனால், நீங்கள் விவசாயிகளின் விரல்களை வெட்டி, அம்பானி, அதானி லாபம் அடையச் செய்கிறீர்கள்.
' இண்டியா' கூட்டணி ஒன்று சேர்ந்து அரசியலமைப்பை பாதுகாக்கும். அரசியல் சமநிலை ஏற்பட்டு, சமூகம் மற்றும் பொருளாதார சமநிலை ஏற்படவில்லை என்றால், அரசியல் சமநிலை அழிந்துவிடும் என அம்பேத்கர் கூறியுள்ளார். அரசியல் சமநிலை முடிந்துவிட்டது. அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றி உள்ளீர்கள். இனிமேல் சமூக சமநிலை என்பது இருக்காது. பொருளாதார சமநிலையும் ஏற்படாது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம். யாருடைய விரல்கள் வெட்டப்பட்டு உள்ளன என்பதை காட்ட விரும்புகிறோம்.
தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் விரல்கள் வெட்டப்பட்டதை காட்ட விரும்புகிறோம். இதனால் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம். இதன் மூலம், புதிய வகையான வளர்ச்சி ஏற்படும். இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் என்ற தடையை அகற்றுவோம். இதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.