பலுானில் ஏறி டில்லி அழகை காணலாம் விரைவில் இரண்டு இடங்களில் அனுமதி
பலுானில் ஏறி டில்லி அழகை காணலாம் விரைவில் இரண்டு இடங்களில் அனுமதி
ADDED : ஜூன் 20, 2025 08:38 PM
புதுடில்லி:டில்லியில் இரண்டு இடங்களில், 'ஹாட் ஏர் பலுான்' எனப்படும், சூடான காற்றால் பறக்கும் பலுான்கள் பறக்க விடப்படும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ரீதியிலான இந்த திட்டம், மாநிலத்தில் முதல் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது.
பல வெளிநாடுகளில், குறிப்பிட்ட சில இடங்களில், சூடான காற்று நிரப்பிய பலுானின் கீழ் தொங்க விடப்படும் தொட்டிலில் நின்றவாறு மக்கள் பயணிப்பது வழக்கம். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சமாக இந்த விளையாட்டு அமைந்துள்ளது.
டில்லியில் முதல் முறையாக இந்த திட்டம் அமலாக உள்ளது குறித்து, விளையாட்டுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
யமுனா நதி பாயும் இடத்தின் கரையோரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் இதற்கான வசதிகள் செய்யப்படும். அக் ஷார்தம் கோவில் அருகே, 2010ல் அமைக்கப்பட்ட காமன்வெல்த் கிராமங்களில் இந்த வசதி செய்யப்படும்.
இதற்கான டெண்டர்கள் தற்போது விடப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க உள்ள நிறுவனம், முதற்கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு சூடான காற்றால் பறக்க விடப்படும் பலுான்களை பறக்க விடும். அதன் பின், ஒன்பது ஆண்டுகளுக்கு இந்த உரிமம் புதுப்பிக்கப்படும்.
நாள் ஒன்றுக்கு, அதிகபட்சம், நான்கு மணி நேரம் பலுான் பறக்க அனுமதி வழங்கப்படும். பறக்க விடுவதற்காக அமைக்கப்படும் தொட்டில், 60 மீட்டர் நீள, அகலம் கொண்டிருக்கும்.
இதன் பக்கங்களில், அந்த நிறுவனங்கள் வேண்டுமென்றால் விளம்பரம் செய்து கொள்ளலாம். விளம்பர கட்டணம், பயணம் செய்ய விரும்புவோருக்கான கட்டணம் பின்னர், அந்தந்த நிறுவனங்களால் முடிவு செய்யப்படும். எனினும், அந்த கட்டணம், எளிதாக அனைவராலும் கொடுக்கப்படக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.