இளம் ஒப்பந்ததாரர் தற்கொலை; காங்., தலைவர் கார்கேவின் மகனுக்கு சிக்கல்
இளம் ஒப்பந்ததாரர் தற்கொலை; காங்., தலைவர் கார்கேவின் மகனுக்கு சிக்கல்
ADDED : டிச 27, 2024 10:28 PM

பெங்களூரூ: கர்நாடகாவில் இளம் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கேவுக்கு தொடர்பிருப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது.
பின்கடாகட்டியில் பல்கி தாலுகாவைச் சேர்ந்த சச்சின் பஞ்சால்,26, என்பவர் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவர், ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு நெருக்கமான ராஜு காபனூர் எனும் ரவுடி டெண்டர் எடுப்பதில் ரூ.15 லட்சம் ஏமாற்றி விட்டார். ரூ.1 கோடி கேட்டு மிரட்டினார். மேலும், கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார், என்று கூறி 4 பேரின் பெயரைக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ., ஒப்பந்ததாரர் சச்சினின் தற்கொலை வழக்கில் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த பிரியங்க் கார்கே, சச்சினின் உயிரிழப்பு எதிர்பாராத ஒன்று என்றும், தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும், அவர் கூறியதாவது: பா.ஜ., தன் மீது போலியான குற்றச்சாட்டை வைக்கிறது. முந்தைய காலங்களிலும் இதுபோன்று அடிப்படை ஆதாரம் இல்லாத போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். தற்போதும், அதனையே செய்கின்றனர். இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுக்களினால், அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது,' எனக் கூறினார்.