ADDED : நவ 14, 2024 09:27 PM
சுதாமாபுரி: மேற்கு டில்லியில் காதல் திருமணம் செய்த ஒரு இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
மேற்கு டில்லியின் சுதாமா புரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா பாபு, 26. இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜா பாபுவுடன் அவர்கள் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் அருகே ராஜா பாபு கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், ராஜா பாபுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசில் ராஜா பாபுவின் தந்தை கங்கா ராம் புகார் செய்தார். தன் மருமகள் குடும்பத்தினர் மீது அவர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ராஜா பாபுவின் மனைவியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரை கைது செய்தனர்.