'யு டியூப்' பார்த்து தனக்கு தானே சிகிச்சை வயிற்றை கிழித்து தையல் போட்ட இளைஞர்
'யு டியூப்' பார்த்து தனக்கு தானே சிகிச்சை வயிற்றை கிழித்து தையல் போட்ட இளைஞர்
ADDED : மார் 22, 2025 05:05 AM

மதுரா: உத்தர பிரதேசத்தில், யு டியூப் பார்த்து, தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்து, வயிற்றை 7 அங்குலம் அளவுக்கு கிழித்த இளைஞர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உ.பி., மாநிலம் மதுராவில் சுன்ராக் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாபு குமார், 32, திருமண மண்டபம் ஒன்றை நடத்துகிறார்.
வயிற்று வலி
இன்டர்நெட், யு டியூப் வீடியோக்கள் மீது மோகம் கொண்ட அவர், அவற்றை அதிக அளவில் பார்த்து, தனக்குத் தானே மருத்துவம் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு துணிந்துள்ளார்.
ஏற்கனவே, மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்திருந்த அவருக்கு, சமீப காலமாக கடுமையான வயிற்று வலி இருந்தது.
இதுகுறித்து, குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் கூறி வந்த அவருக்கு, மருத்துவமனைக்கு சென்று முறையாக சிகிச்சை எடுப்பதற்கு பதிலாக, திடீரென விபரீத யோசனை வந்தது. இதையடுத்து, யு டியூப் பார்த்து, அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வாங்கி வந்து, கடந்த 19ம் தேதி வீட்டிலேயே, தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்தார்.
அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு, வயிற்றுப் பகுதி மரத்துப் போவதற்கான ஊசியை போட்டார்.
பின், அடி வயிற்றில் 7 அங்குலம் அளவுக்கு கிழித்து, எதனால் வலி ஏற்படுகிறது என ஆராய்ந்துள்ளார்.
ஆனால், ஆபரேஷன் பிளேடு ஆழமாக பாய்ந்ததால், ரத்தம் வெளியேறியது. உடனே, யு டியூப் வீடியோ அனுபவத்தில், அவசரம் அவசரமாக வயிற்றில் தையல் போட்டார். தவறாக தையல் போட்டதால் ரத்தம் நிற்காமல் வெளியேறி, வலி அதிகரித்துள்ளது.
நிலைமை விபரீதமானதை உணர்ந்ததும், அறையில் இருந்து அலறியபடி ஓடி வந்து வீட்டில் இருந்தவர்களிடம் நடந்த உண்மையைக் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
அங்கு ராஜபாபுவை பரிசோதித்த தலைமை டாக்டர் சஷி ரஞ்சன், 7 அங்குலத்துக்கு கோணல் மாணலாக 12 தையல்கள் போட்டிருந்ததை பார்த்தார். அதை பிரித்து எடுத்துவிட்டு, வேறு தையல் போட்டு, ரத்தம் வெளியேறுவதை நிறுத்தினார்.
வழக்குப்பதிவு
இவ்வளவு நடந்தும் சுய உணர்வுடனேயே ராஜபாபு இருந்திருக்கிறார். ஆனாலும், உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக, ஆக்ராவில் அனைத்து வசதிகளும் நிறைந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, ஆக்ரா கொண்டு செல்லப்பட்ட ராஜபாபுவுக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியதால், ஒட்டுமொத்த சம்பவமும் நேற்று வெளியானது.