ADDED : அக் 31, 2024 07:35 AM

சாம்ராஜ்நகர்; திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி, மலை மஹாதேஸ்வரா மலைக்கு இளைஞர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.
திருமணத்துக்கு பெண் கிடைக்காமல், மனம் வெறுத்த இளைஞர்கள் ஆண்டுதோறும், சாம்ராஜ்நகர், ஹனுாரின், மலை மஹாதேஸ்வரா மலைக்கு பாதயாத்திரை செல்கின்றனர். மஹாதேஸ்வராவை தரிசனம் செய்து, தங்களுக்கு பெண் கிடைக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்கின்றனர்.
மலை மஹாதேஸ்வர மலையில், தீபாவளி கொண்டாட்டம் நடக்கவுள்ளது. இளைஞர்கள் பெருமளவில் பாதயாத்திரையாக மலைக்கு வருகின்றனர்.
கொள்ளேகாலின், ஹொசமாலங்கி கிராமத்தின் 62 இளைஞர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. எனவே தங்களுக்கு பெண் கிடைத்து, திருமணத்தை நடத்தி வைக்கும்படி பிரார்த்தனை செய்து கொண்டு, நேற்று பாதயாத்திரை நடத்தினர்.
தீபாவளியை முன்னிட்டு, மஹாதேஸ்வரா கோவில் மின் அலங்காரத்தால் ஜொலிக்கிறது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. கர்நாடகாவின், பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தில் இருந்தும், பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.