ADDED : ஜன 02, 2025 06:27 AM

ஹாசன்: காதலை கைவிட்டதால் முன்னாள் காதலனை, இளம்பெண் கத்தியால் குத்தினார்.
ஹாசன் அருகே ஏ.குடுகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மனுகுமார், 25, பவானி, 25. பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தனர். கல்லுாரியில் படித்தபோதில் இருந்து காதலித்தனர். கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
காதலை 'பிரேக் அப்' செய்து கொள்வோமென, இரண்டு மாதங்களுக்கு முன்பு மனுகுமார் கூறிவிட்டார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, ஹாசன் டவுன் பி.எம்.சாலையில் உள்ள ஹோட்டலுக்கு, மனுகுமார் நண்பர்களுடன் சென்றார்.
ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது, மனுகுமாரை வழிமறித்து, பவானி தகராறு செய்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனுகுமார் வயிற்றில் குத்திவிட்டு தப்பினார். மனுகுமாரை நண்பர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஹாசன் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள பவானியை தேடுகின்றனர்.

