ADDED : பிப் 23, 2024 12:29 AM

விஜயவாடா: ஆந்திராவில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, கட்சி அலுவலகத்திலேயே இரவு முழுதும் தங்கிய நிலையில், நேற்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை தீர்க்கக் கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அந்த மாநில காங்., தலைவரும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட உள்ள காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறாத வகையில், போலீஸ் காவல் போடப்பட்டது.
இந்நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்க, விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலேயே நேற்று முன்தினம் இரவு ஒய்.எஸ். ஷர்மிளா தங்கியிருந்தார். இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த ஐந்து ஆண்டு களில் இளைஞர்கள், வேலையில்லாதோர் மற்றும் மாணவர்களின் முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை.
அதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்து விட்டார். வேலையற்றோர் சார்பாக நாங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், எங்களை வீட்டுக் காவலில் வைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா; இது வெட்கக்கேடானது. ஒரு பெண்ணாக நான் வீட்டுக் காவலை தவிர்க்க, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, திட்டமிட்டபடி காங்கிரசார் நேற்று விஜயவாடாவில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், போராட்டத்துக்கு வந்த ஒய்.எஸ். ஷர்மிளா உட்பட காங்கிரசார் 40 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.