'நீ ஒல்லியா இருக்கே; உன்னை எனக்கு பிடிக்கலை' மனைவியை கொன்றதாக கணவர் கைது
'நீ ஒல்லியா இருக்கே; உன்னை எனக்கு பிடிக்கலை' மனைவியை கொன்றதாக கணவர் கைது
ADDED : பிப் 04, 2025 12:37 AM

மலப்புரம்: கேரளாவில் பெண் சந்தேகமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜா. அதே ஊரைச் சேர்ந்தவர் பிரபின். இருவருக்கும் 2023ம் ஆண்டு திருமணமான நிலையில், கடந்த வாரம் பிரபின் வீட்டு மாடியில் சந்தேகமான முறையில் விஷ்ணுஜா இறந்து கிடந்தார்.
குற்றச்சாட்டு
இது தொடர்பாக, விஷ்ணுஜாவின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பிரபின் மீது புகார் அளித்த விஷ்ணுஜாவின் தந்தை வாசுதேவன், தன் மகளை, அவரது கணவர் அடித்துக் கொன்று துாக்கில் தொங்கவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.
சம்பவம் நிகழ்ந்த அன்று, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும், இதையடுத்து பிரபின் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், மாலையில் விஷ்ணுஜா உயிரிழந்ததாகவும், அவரது மூத்த சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது, விஷ்ணுஜாவின் மாமியாரும் வீட்டில் இருந்துள்ளர்.
திருமணமான புதிதில் இருந்தே தன் மகளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரபின் டார்ச்சர் செய்ததாகவும், ஒல்லியாக, அழகில்லாமல் இருப்பதாக கேலி செய்ததோடு, வேலை தேடிக்கொள்ளும்படி பிரபின் வற்புறுத்தியதாக புகாரில் கூறியுள்ளனர்.
முகத்தில் காயம்
விஷ்ணுஜாவின் தொலைபேசி மற்றும் வாட்ஸாப் உரையாடல்களையும் பிரபின் ஒட்டுக் கேட்டதாக விஷ்ணுஜாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். விஷ்ணுஜா முகத்தில் காயங்களை பார்த்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மலப்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த பிரபின், வீட்டில் ஒரு விதமாகவும், பொது வெளியில் வேறு விதமாகவும் நடந்து கொள்வார் என, அவருடன் பணியாற்றிய ஊழியர் தெரிவித்தார்.
இந்நிலையில், விஷ்ணுஜா மரணம் தொடர்பாக மலப்புரம் போலீசார், பிரபினை கைது செய்துள்ளனர்.

