ADDED : மார் 20, 2025 03:42 AM
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், கடூர் தாலுகாவின், பஞ்சனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சித்த ராமேகவுடா, 40. இவர் இம்மாதம் 15ம் தேதி காலை, கிராமத்தின் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த கடூர் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரை கொலை செய்தது, அக்காவின் மகன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சனஹள்ளி கிராமத்தின் கங்காதரேஸ்வர கவுடாவுக்கு, ஐந்து பிள்ளைகள். இவரது மகன் சித்தராமேகவுடா, அவரது அக்கா நிர்மலா இடையே 26 ஏக்கர் தென்னந்தோப்பு, 24 வர்த்தக கடைகள், மனை விஷயத்தில் தகராறு இருந்தது.
தந்தையின் சொத்துக்காக நிர்மலா, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வப்போது அக்கா, தம்பி இடையே வாக்குவாதம் நடந்தது. பிப்ரவரியில் சண்டை நடந்த போது, சித்தராமேகவுடா, நிர்மலாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனால், நிர்மலா மகன் சஞ்சய், 22, கோபம் அடைந்தார். இவர் சித்ரதுர்காவின் தனியார் கல்லுாரியில் டி பார்ம் படிக்கிறார்.
தன் தாயை திட்டிய மாமா சித்தராமேகவுடாவை, கொலை செய்யும் நோக்கில் ஊருக்கு வந்தார். மார்ச் 14ம் தேதி மாலை, கிராமத்தின் பஸ் நிலையம் அருகில், சித்தராமேகவுடாவை பார்த்து, பைக்கில் அமர்த்தி தோட்டத்துக்கு அழைத்து வந்தார்.
தாயை திட்டியது குறித்து சண்டை போட்டு, ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது, விசாரணையில் தெரிந்தது. சஞ்சய், நேற்று கைது செய்யப்பட்டார்.