'ஆன்லைன்' விளையாட்டால் விபரீதம் கடனால் இளைஞர் தற்கொலை
'ஆன்லைன்' விளையாட்டால் விபரீதம் கடனால் இளைஞர் தற்கொலை
ADDED : டிச 05, 2024 07:22 AM

கே.ஆர்., புரம்: ஆன்லைன் விளையாட்டின் மோகத்தால், பலரிடம் கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு கே.ஆர்.,புரத்தைச் சேர்ந்தவர் பிரவீன், 19. பத்து நாட்களுக்கு முன்பு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோர் அளித்த புகாரின்படி கே.ஆர்., புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தான், ஆன்லைன் விளையாட்டால் பிரவீன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான பிரவீன், கல்லுாரிக்கு கூட செல்லாமல், வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர் பணிக்கு சென்ற பின், தனது அறையில் அமர்ந்து ஆன்லைனில் விளையாடி வந்தார்.
விளையாடுவதற்காக, 'கேம்' நுழைவுக் கட்டணம் செலுத்துவதற்கும், பந்தயம் கட்டுவதற்கும் நண்பர்கள், ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்கி உள்ளார்.
நாளடைவில் கடனை திருப்பிச் செலுத்த மேலும் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய பணம் எல்லாம், விளையாட்டில் இழந்ததாலும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி அளித்தால், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் விசாரிக்கின்றனர்.