நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற இளைஞர்கள் உறுதி: பிரதமர் மோடி
நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற இளைஞர்கள் உறுதி: பிரதமர் மோடி
ADDED : பிப் 04, 2024 01:47 PM

புதுடில்லி: நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற இளைஞர்கள் உறுதி ஏற்று உள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி கவுகாத்தியில் 11,600 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிறகு மோடி பேசியதாவது: இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மூலம் தெற்கு ஆசிய நாடுகளுடனான இணைப்பு பலம் பெறும். சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
சுதந்திரத்திற்கு பிறகு, ஆட்சியில் இருந்தவர்கள், வழிபாட்டுக்கான புனித தலங்களின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. அரசியல் லாபங்களுக்காக சொந்த கலாசாரம் மற்றும் வரலாற்றை அவமானப்படுத்தினர். கடந்த கால வரலாற்றை அழித்து எந்த நாடாலும் முன்னேற முடியாது. ஆனால், 10 ஆண்டுகளில் சூழ்நிலை மாறி உள்ளது.
நமது யாத்திரைகள் நமது கோவில்கள், நம்பிக்கைக்குரிய இடங்கள், வெறும் தரிசனத்திற்குரிய இடங்கள் அல்ல. இவை நமது நாகரிகத்தின் பல்லாயிரம் ஆண்டு பயணத்தின் அழியாத அடையாளங்கள். ஒவ்வொரு நெருக்கடியிலும் இந்தியா எப்படி உறுதியாக நின்றது என்பதற்கு இதுவே சாட்சி.
பா.ஜ., அரசு பதவியேற்கும் முன்னர், அசாமில் 6 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது, 12 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சைக்கான மையமாக அசாம் மாறி உள்ளது.
10 ஆண்டுகளில் சாதனை படைக்கும் அளவிற்கு சுற்றுலா பயணிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற உறுதி ஏற்று உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் ஆயுதப்படை சட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஒரு சிறிய இலக்குடன் ஒரு நாடு முன்னேற முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.