'பிட்காயின்' முறைகேடு வழக்கில் அதிரடி; இளைஞர் காங்., தலைவருக்கு சம்மன்
'பிட்காயின்' முறைகேடு வழக்கில் அதிரடி; இளைஞர் காங்., தலைவருக்கு சம்மன்
ADDED : பிப் 05, 2025 09:46 PM

பெங்களூரு; 'பிட்காயின்' முறைகேடு வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட்டிற்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, 2022ல் தடை செய்யப்பட்ட ஹைட்ரோகஞ்சா விற்பனை செய்த வழக்கில், ஜெயநகரின் ஸ்ரீகிருஷ்ணா, 29 என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அரசின் பல துறைகளின் இணையதளங்களை முடக்கி பணம் சம்பாதித்து, அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுத்தியது தெரிந்தது.
தனியார் நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கி பிட்காயின்களை திருடியதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான 31 பிட்காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் பா.ஜ., தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் வழக்கை சி.ஐ.டி., விசாரித்தது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.ஐ.டி., - டி.எஸ்.பி., ஸ்ரீதர், மூன்று இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய தொடர் விசாரணையில், பிட்காயின் முறைகேடு வழக்கில் கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட்டிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.
இதனால், வரும் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு முன்பும் சி.ஐ.டி., போலீசார் ஒரு முறை, முகமது நலபட்டிடம் விசாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் கடந்த 2018ல் ஏற்பட்ட தகராறில் வித்வத் என்பவரை, முகமது நலபட், அவரது நண்பர்கள் தாக்கி இருந்தனர்.
அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வித்வத்தை தாக்கிய போது ஸ்ரீகிருஷ்ணாவும் இருந்தார்.
முகமது நலபட், பெங்களூரு சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸின் மகன் ஆவார்.