ADDED : நவ 24, 2026 05:40 PM
புதுடில்லி: பைக்கில் சென்ற வாலிபர், மாஞ்சா நுால் கழுத்தை அறுத்து உயிரிழந்தார்.
டில்லியை சேர்ந்த, 26 வயது வாலிபர், டில்லி – மும்பை விரைவுச் சாலையில் நேற்று முன் தினம் மாலை, பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பாரபுல்லா அருகே, பட்டம் விடுவதற்கு பயன்படுத்தப்படும் மாஞ்சா நுால் வாலிபரின் கழுத்தில் அறுத்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த வாலிபர், அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், வாலிபர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாஞ்சா நூலுக்கு பலியான வாலிபருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, மூன்று மாத கைக்குழந்தை இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பட்டம் பறக்க விட்டவர்களை தேடி வருகின்றனர்.
