ADDED : ஏப் 30, 2025 06:39 PM
புதுடில்லி:திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர், சிறைக்கு கொண்டு சென்ற போது, போலீஸ் ஜீப்பில் குதித்ததில் காயம் அடைந்து உயிரிழந்தார். மற்றொருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கபஷேரா ஸ்டேஷனின் தலைமைக் காவலர் பல்பீர் சிங் மற்றும் போலீஸ்காரர் நித்தேஷ் ஆகியோர், நேற்று முன் தினம் மாலை 3:00 மணிக்கு பைக்கில் ரோந்து சென்றனர். அப்போது, எதிரில் ஒரே பைக்கில் வந்த இரண்டு பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. வண்டியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால், இருவரும் தப்ப முயன்றனர். போலீசார் விரட்டிச் சென்று இருவரையும் கைது செய்ட்னனர்.
சமல்கா பகுதியைச் சேர்ந்த விகாஸ் என்ற மஜ்னு,28, மற்றும் ரவி சாஹ்னி என்ற ரவி கலியா,19, என்பது தெரிய வந்தது.
விகாஸிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பைக் திருடப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.
கபஷேரா ஸ்டேஷனில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, போலீஸ் ஜீப்பில் வசந்த் குஞ்ச் வடக்கு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஸ்டேஷனில் இருந்து திரும்ப ஜீப் மெதுவாகச் சென்ற போது, இருவரும் ஜீப்பில் இருந்து குதித்து ஓடினர். அப்போது தடுக்கி விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இருவரும் ஐ.ஜி.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவி சாஹ்னி மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். விகாசுக்கு லேசான சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்டேஷனில் போலீசார் தாக்கியதால் ரவி இறந்து விட்டதாக கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சமல்கா - கபஷேரா சாலையில் நேற்று மறியல் நடத்தினர். போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
ரவியின் குடும்பத்தினர் கூறியதாவது:
இருவரையும் வீட்டிலிருந்து தான் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காட்டுப் பகுதிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக கூறினர். போலீஸ்காரர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர்தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரவி சாஹ்னி இறந்ததையும் இரவுதான் எங்களிடம் தெரிவித்தனர். ரவியை அடித்துக் கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.