ADDED : பிப் 12, 2025 04:28 PM

வயநாடு: வயநாட்டில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலியானார்.
கேரள மாநிலம் மேப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டமாலாவில் உள்ள மலைப்பகுதி பழங்குடியினர் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
மேப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டமாலாவில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 27, நேற்று இரவு மலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த காட்டு யானை தாக்கி உள்ளது. அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள நூல்புழா கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குள் 45 வயது நபர் ஒருவர் காட்டு யானை தாக்கி கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

