இளைஞர்கள் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்: கார்கே
இளைஞர்கள் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்: கார்கே
ADDED : ஜூலை 11, 2025 05:41 PM

புவனேஸ்வர்: '' இளைஞர்கள் எழுச்சி பெற்று அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
ஒடிசாவில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: அரசியலமைப்பில் இருந்து மதசார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகிய வார்த்தைகளை நீக்க பா.ஜ., விரும்புவதாக கேள்விப்பட்டேன். அரசியலமைப்புக்கு கட்டுப்படுவோம் என்று, அவர்களின் கட்சி விதிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதனை அக்கட்சி பின்பற்றுமா
ஏழைகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் பேசி வருகின்றன. எனவே, இளைஞர்கள் விழித்தெழுந்து அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். இல்லையென்றால் பா.ஜ., சமூகத்தை பிளவுபடுத்திவிடும்.
மஹாராஷ்டிராவில் திருட்டு அரசாங்கம் அமைந்துள்ளது. 85 லட்சம் வாக்காளர்களை மாற்றிவிட்டு, இங்கு பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல், பீஹாரிலும் 7 கோடி வாக்காளர்களில் 2 கோடி பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்தகைய நபர்களும், அரசும் வேண்டுமா?
இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்தை பாதுகாக்குமா. துரோகிகளை விரட்டியடித்து அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பா.ஜ.,வினர் பெரிய வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால், ஒடிசாவிற்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. அவர்கள் எந்த பணியை செய்யாமலும் விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

