'நிபா'வால் இளைஞர் பலி; கேரளாவில் கடும் கட்டுப்பாடு
'நிபா'வால் இளைஞர் பலி; கேரளாவில் கடும் கட்டுப்பாடு
UPDATED : செப் 17, 2024 06:55 AM
ADDED : செப் 17, 2024 01:46 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரசால், 24 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தின் வாண்டூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர், சமீபத்தில், கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து வந்தார். உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிழந்த இளைஞருக்கு நிபா வைரஸ் இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த நபரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்ற 15 பேர் மற்றும் அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 151 பேர் என மொத்தம் 166 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் முடிவுகள் வரும்வரை, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, நிபா வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில் மலப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர் வசித்த திருவாலி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4, 5, 6 மற்றும் 7வது வார்டுகளும், அதன் அருகே உள்ள மம்பாடு கிராம பஞ்சாயத்தின் 7வது வார்டு உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இப்பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடவும், சமூக நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை மட்டுமே கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள், மதரசாக்கள், அங்கன்வாடிகள், திரையரங்குகளை, மறு உத்தரவு வரும் வரை மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.