யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: ஜூலை 15 முதல் அமல்
யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: ஜூலை 15 முதல் அமல்
UPDATED : ஜூலை 09, 2025 09:22 PM
ADDED : ஜூலை 09, 2025 09:12 PM

புதுடில்லி: யூடியூபில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இன்றைய நவீன உலகில், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் ஏராளமானோருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனால், ஏராளமானோர் பணம் சம்பாதித்து வருகின்றனர். யூடியூப் பக்கத்தில் சேனல்களை துவக்கி வீடியோ பதிவேற்றம் செய்கின்றனர். அதில் குறிப்பிட்ட பார்வையாளர்களை பெறும் சேனல்களுக்கு யுடியூப் நிறுவனம் பணம் வழங்கி வருகிறது. இதனால், இன்னும் சிலர் புதுமைகளை புகுத்தி ரசிகர்களை கவர முயற்சித்து வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், யுடியூப் தனது கொள்கையில் புதிய மாற்றங்களை செய்துள்ளது. இது வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் விதிகளை பூர்த்தி செய்யாத சேனல்கள், பணம் வழங்கும் யூடியூப் பார்ட்டனர் திட்டத்தில் ( Youtube Partner Program(YPP)) இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதிக்க 1,000 சந்தாதாரர்கள், கடந்த 12 மாதங்களில் 4,000 பொதுப் பார்வை நேரம் அல்லது கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் குறுவீடியோ பார்வையாளர்கள் கொண்டவர்களே யூடியூப்-ல் வருமானத்திற்காக முறையிட முடியும் என்பது மட்டும் இனிமேல் போதாது.
புதிய விதிகள் என்ன
1. தாங்களாக முயற்சி செய்து புதிய படைப்புகளை உருவாக்கும் அசல் படைப்பாளிகளுக்கு மட்டுமே வருமானம் வழங்கப்படும். அவர்களின் வீடியோ மட்டுமே விளம்பரப்படுத்தப்படும்.
2.மீண்டும், மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள்
3.ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் வீடியோக்கள்
4. தரம் குறைந்த வீடியோக்களுக்கும் பணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மிகக் குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், மற்றவர்களின் வீடியோவை காப்பி அடித்து சில திருத்தங்கள் மட்டும் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள், டெம்ப்லேட் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் போன்றவற்றுக்கு இனிமேல் யூடியூப் நிறுவனம் பணம் தராது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.