ஒய்.எஸ்.ஆர். காங்., - எம்.பி., அரசியலுக்கு திடீர் முழுக்கு
ஒய்.எஸ்.ஆர். காங்., - எம்.பி., அரசியலுக்கு திடீர் முழுக்கு
ADDED : ஜன 26, 2025 02:50 AM

புதுடில்லி: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான விஜயசாய் ரெட்டி, 67, தன் எம்.பி., பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அரசியலில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்., அங்கு எதிர்க்கட்சியாக உள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான விஜயசாய் ரெட்டி, தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
அரசியலில் இருந்து விலகுகிறேன். இதனால், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறேன். எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை.
பதவியையோ, பலனையோ, பணத்தையோ எதிர்பார்த்து ராஜினாமா செய்யவில்லை. இது முற்றிலும் என் தனிப்பட்ட முடிவு.
இதில் எந்தவித அழுத்தங்களும் இல்லை. நான்கு தசாப்தங்கள் மற்றும் மூன்று தலைமுறைகளாக என்னை ஆதரித்த ஒய்.எஸ்.ஆர்., குடும்பத்திற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்பை தந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவர் குடும்பத்தாருக்கும் நன்றி.
கட்சியின் பார்லி., தலைவர், ராஜ்யசபா தலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் தேசிய பொதுச்செயலர் என, கட்சி மற்றும் மாநில நலனுக்காக அயராது நேர்மையுடன், எந்த சமரசமும் இன்றி உழைத்தேன்.
மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் இடையே நல்லுறவை பேணுவதற்கும், மாநிலத்துக்கு அதிகபட்ச பலன்களை பெறுவதற்கும் பாலமாக பணியாற்றினேன்.
தெலுங்கு தேச கட்சியுடன் எனக்கு அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம், ஆனால், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் என் கவனம் விவசாயத்தில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜயசாய் ரெட்டியின் எம்.பி., பதவிக்காலம் வரும் 2028ம் ஆண்டு வரை உள்ள நிலையில், டில்லியில் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கரை நேற்று சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.