ஆந்திராவில் பரிகார பூஜை செய்த ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகிகள்
ஆந்திராவில் பரிகார பூஜை செய்த ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகிகள்
ADDED : செப் 28, 2024 11:44 PM

அமராவதி: திருப்பதி லட்டு குறித்து பொய் தகவல் தெரிவித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாவம் செய்து விட்டதாகக் கூறி, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் அறிவிக்கப்பட்ட பூஜைகளில், ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகிகள் நேற்று ஈடுபட்டனர்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினர்.
இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச் சாட்டுகளை, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., மறுத்துள்ளது.
மேலும், சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக, பொய் தகவல்களை வெளியிட்டதாகக் கூறியது.
அரசியலுக்காக லட்டுவின் புனிதத்தன்மையை இழிவுபடுத்தி சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடும் வகையில் பூஜைகள் செய்யப்படும் என்றும் ஜெகன்மோகன் கட்சி அறிவித்திருந்தது.
இதன்படி, ஆந்திராவின் பல கோவில்களில், அக்கட்சி நிர்வாகிகள் நேற்று பரிகார பூஜைகளில் ஈடுபட்டனர்.