ADDED : செப் 25, 2024 09:15 PM

மைசூரு : மைசூரு யுவ தசரா நடக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மைசூரு தசராவின்போது, வழக்கமாக நகரில் உள்ள மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் 'யுவ தசரா' நடந்து வரும். இவ்விழாவுக்கு வருவோரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் இரட்டிப்பாகி வருகிறது.
அங்கு போதுமான இடவசதி இல்லாதது, கூட்ட நெரிசல், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இம்முறை, யுவ தசராவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, புறநகர் பகுதியில் நடத்த, சம்பந்தப்பட்ட தசரா துணை கமிட்டியினர் முடிவெடுத்தனர்.
இதற்காக பல இடங்களில் ஆய்வு செய்து, உத்தனஹள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நிலம் உள்ளது. இங்கு 150 அடி நீளத்துக்கு மிகப்பெரிய மேடை அமைக்கலாம். ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கலாம்.
வி.ஐ.பி.,க்கள், பொதுமக்களுக்கென தனித்தனி இருக்கை வசதிகள் செய்யப்படும். குடிநீர் வசதி, மொபைல் கழிப்பறைகள், நகரில் இருந்து இப்பகுதிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சேவை, வாகன நிறுத்துமிடம் வசதி செய்யப்பட உள்ளது.
வழக்கமாக தசரா உணவு மேளா, சாரணர் - சாரணியர் மைதானத்திலும்; யுவ தசரா மஹாராஜா கல்லுாரி மைதானத்திலும் நடக்கும். இரண்டு நிகழ்ச்சிக்கும் ஒரு கி.மீட்டருக்குள் இருக்கும். இது பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்தது.
இத்துடன், நகருக்குள் இருப்பதால், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வசதியாக இருந்தது. தற்போது இடம் மாற்றப்படுவதால், பொது மக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி காந்த ரெட்டி கூறியதாவது:
ஆண்டுதோறும் தசராவின் போது மஹாராஜா கல்லுாரி மைதானம் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த மைதானம் சிறிதாக இருப்பதால், இடவசதி குறைவு. இம்முறை ஒரு லட்சம் பேர் பார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், நகரின் வட்டச்சாலையில் உள்ள உத்தனஹள்ளிக்கு மாற்றப்படுகிறது. மைசூரின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும், இங்கு சுலபமாக சென்று வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பால் கறக்கும் போட்டி
விவசாய தசரா போஸ்டரை, கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் நேற்று வெளியிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அக்., 6, 7ம் தேதிகளில் பால் கறக்கும் போட்டி நடத்தப்படும். முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும்; 2வது பரிசாக 80,000 ரூபாயும்; 3வது பரிசாக 60,000 ரூபாயும்; 4வது பரிசாக 40,000 ரூபாயும் வழங்கப்படும். இதில், மாநிலத்தில் உள்ள பால் உற்பத்தி விவசாயிகள் பங்கேற்கலாம். அக்., 6ம் தேதி நாய்கள் கண்காட்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.