ADDED : ஏப் 16, 2026 04:08 PM

புதுடில்லி:கடந்த சில நாட்களாக வந்த இ - மெயில் மிரட்டல்கள் மற்றும் சட்டசபை வளாகத்தில் காரில் நுழைந்த நபர் விவகாரங்களை அடுத்து, டில்லி சட்டசபை சபாநாயகருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், அதாவது, மார்ச் 23ல் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடிய நாளில் இருந்து, டில்லி சட்டசபைக்கு அடிக்கடி இ - மெயில் குண்டு மிரட்டல் வந்த வண்ணமாக உள்ளது. எனினும், அந்த மெயிலை அனுப்பியது யார் என்பது கண்டறியப்படவில்லை.
அதுபோல, உயர் பாதுகாப்பு கெடுபிடி மிகுந்த டில்லி சட்டசபை வளாகத்திற்குள், காரை வேகமாக ஓட்டிச் சென்று, நுழைவாயில் ஒன்றை தகர்த்து, சபாநாயகர் கார் அருகே மலர் வளையம் வைத்து திரும்பியுள்ளது, ஒரு கும்பல்.
அந்த மூன்று பேர் கும்பலுக்கு, ஏழு நாட்கள் நீதிமன்ற காவல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களால், சபாநாயகர் விஜேந்தர் குப்தாவுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் படி, 24 மணி நேரமும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும். அவர் செல்லும் வழியில், அவரது வாகன அணிவகுப்பில் விசேஷமான கார் இடம்பெறும் என்பன போன்றவை இடம்பெற்றுள்ளன.
