ADDED : அக் 16, 2024 10:21 PM

சிக்கமகளூரு மாவட்டம், கெம்மன்ஹுன்டியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது 'இசட் பாயின்ட்'. கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் இருக்கும் இந்த மலையை, தொலைவில் இருந்து பார்த்தால் 'இசட்' வடிவில் தென்படும். அதனாலேயே இதற்கு 'இசட் பாயின்ட்' என்று பெயரிட்டு உள்ளனர்.
இந்த மலைக்கு சென்றால், அமைதியான சூழலில் உங்கள் மனதை இளைப்பாற வைக்கலாம். ஓய்வெடுப்பது மட்டுமின்றி, பல சாகச செயல்களையும் உணர முடியும். 'அட்வென்சர்' பிரியர்களுக்கு சிறந்த இடமாக அமையும். மேலும், இயற்கையை விரும்புவோர், நடந்தபடியே கண்களை கவர்ந்திழுக்கும் காட்சிகளை காணலாம்.
சிக்கமகளூரு சுற்றுப்பயணத்தில் குறுகிய மலையேற்ற திருப்தியை இந்த 'இசட் பாயின்ட்' நிச்சயம் அளிக்கும். பள்ளத்தாக்குகள், செங்குத்தான மலைகளால் சூழப்பட்டு உள்ளது. மலை உச்சியில் இருந்தபடி மாலையில் சூரியன் அஸ்தமனத்தை காணும் போது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு ஏற்படும்.
கெம்மன்ஹுன்டி ராஜ்பவனில் இருந்து 3 கி.மீ., துாரமுள்ள சவாலான மலையேற்றம் துவங்குகிறது. செல்லும் வழியில், சாந்தி நீர் வீழ்ச்சியை காணலாம். அங்கு குளித்து, புத்துணர்ச்சி பெறலாம்.
இதன் பின்னரே, சவாலான, கடினமான பாதையை எதிர்கொள்ள நேரிடும். இவை அனைத்தும் மலையேறிய பின், நீங்கள் பார்க்கும் காட்சி, உங்கள் கடின உழைப்புக்கு மதிப்பளிப்பதாக இருக்கும்.
இங்கு செல்ல விரும்புவோர், டிசம்பரில் இருந்து மார்ச் மாதத்துக்குள் செல்லலாம். இந்த காலகட்டத்தில், இப்பகுதியின் சீதோஷ்ண நிலை, 14 டிகிரி செல்ஷியசில் இருந்து, 22 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.
ஜூனில் இருந்து செப்டம்பர் மாதம் வரை மழை காலம் என்பதால், மலையின் அழகை உங்களாக ரசிக்க முடியாது.
- நமது நிருபர் -