பக்கவாத்தியமாக இருந்த தபேலாவை முதன்மை வாத்தியமாக மாற்றிய ஜாகிர்
பக்கவாத்தியமாக இருந்த தபேலாவை முதன்மை வாத்தியமாக மாற்றிய ஜாகிர்
ADDED : டிச 17, 2024 05:00 AM

புதுடில்லி: 'இடியோபாத்திக் பல்மனரி பைப்ரோசிஸ்' எனப்படும், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், 73, நேற்று அதிகாலை 5:30 மணிக்கு காலமானார்.
அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தாள வாத்தியத்தின் மன்னன் என்று வர்ணிக்கப்பட்டவர் உஸ்தாத் ஜாகிர் உசேன். உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவின் மகனாக, 1951, மார்ச் 9ல் பிறந்தார்.
பத்ம விருதுகள்
பிறந்தது முதல் தந்தையின் தபேலா இசையை மட்டுமே கேட்டு வளர்ந்த ஜாகிர், 7வது வயதில் முதல் மேடை நிகழ்ச்சியை நிகழ்த்தினார்; 12வது வயதில் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள துவங்கினார்.
ஜாகிர் உசேனின் தன்னிகரற்ற தாள ஞானத்தால், மேடைகளில் பக்க வாத்தியமாக இருந்த தபேலா முதன்மை வாத்தியமானது.
உள்நாட்டு இசை மேதைகள் மட்டுமின்றி, வெளிநாட்டு இசைக் கலைஞர்களுடன் கூட்டு சேர்ந்து, இவர் இசைத்த கச்சேரிகள் உலகப் புகழ் பெற்றன. இந்திய இசை பாரம்பரியத்துக்கும், மேற்கத்திய இசைக்கும் பாலமாக விளங்கிய ஜாகிருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கத்திய கிதார் கலைஞர் ஜான் மெக்லாலின், வயலின் கலைஞர் எல்.சங்கர், கடம் கலைஞர் விக்கு விநாயக்ராமுடன் ஜாகிர் இணைந்து, 'சக்தி' என்ற இசைக்குழுவை 1973ல் துவங்கினார். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றது.
அவரது வாழ்நாளில், மூன்று கிராமி விருதுகளையும் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில், சக்தி குழுவின் இசை நிகழ்ச்சியை மும்பையில் நடத்த அவர் திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஐ.பி.எப்., எனப்படும், 'இடியோபாத்திக் பல்மனரி பைப்ரோசிஸ்' என்ற நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்ட ஜாகிர் உசேன், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
இசை மரபு
அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலன் அளிக்காததால், செயற்கை சுவாசக் கருவிகள் நிறுத்தப்பட்ட பின், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக ஜாகிரின் சகோதரி குர்ஷித் ஆலியா அறிவித்தார்.
ஜாகிர் உசேனுக்கு அன்டோனியா மின்னெகோலா என்ற மனைவியும், அனிசா குரேஷி, இசபெல்லா குரேஷி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
ஜாகிரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் இசை மரபுகளுக்கு இடையே பாலமாக இருந்தவர் ஜாகிர் உசேன்' என குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'தபேலாவை உலக அரங்கிற்கு கொண்டு வந்தவர் ஜாகிர் உசேன். அவரது ஈடு இணையற்ற தாள ஞானம் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.
சர்வதேச இசையுடன் இந்திய பாரம்பரிய மரபுகளை தடையின்றி இணைத்தார். இதனால் கலாசார ஒற்றுமையின் சின்னமாக மாறினார்.
அவரது இசைக்கோர்வைகள் தலைமுறைகளையும் தாண்டி ரசிகர்களையும், இசை ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.