இப்ப புரியுதா நாங்க படும்பாடு; சொமேட்டோ சி.இ.ஓ., அலைக்கழிப்பு; ஒரு பதிவால் நிகழ்ந்த மாற்றம்
இப்ப புரியுதா நாங்க படும்பாடு; சொமேட்டோ சி.இ.ஓ., அலைக்கழிப்பு; ஒரு பதிவால் நிகழ்ந்த மாற்றம்
ADDED : அக் 07, 2024 10:30 PM

புதுடில்லி : டில்லியில் பிரபல மாலில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரிக்காக வாங்கச் சென்ற சொமேட்டோ சி.இ.ஓ., தீபீந்தர் கோயல் அலைக்கழிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ சி.இ.ஓ., தீபீந்தர் கோயல், தனது ஊழியர்களைப் போல, மனைவியுடன் சேர்ந்து டெலிவரி பணியில் ஈடுபட்டார். டில்லியில் உள்ள ஆம்பியன்ஸ் மாலில் செயல்பட்டு வரும் ஓட்டலில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை, டெலிவரிக்காக பிக்அப் செய்ய சென்றுள்ளார்.
சொமேட்டோ ஊழியர்களின் சீருடையை அணிந்தபடி, அந்த மாலின் பிரதான நுழைவு வாயிலுக்கு சென்ற அவரை, அங்கிருந்து மால் பணியாளர்கள், மாற்றுப் பாதையில் வருமாறு கூறினர். பின்னர், மற்றொரு நுழைவு வாயிலுக்கு சென்ற போது, படிக்கட்டில் ஏறி செல்லுமாறு கூறியுள்ளனர்.
தொடர்ந்து, 3வது மாடிக்கு சென்ற தீபீந்தர் சிங், அந்த ஓட்டலின் முன் காக்க வைக்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த சக சொமேட்டோ ஊழியர்களுடன் கலகலப்பாக பேசி, குறைகளையும், நிறைகளையும் கேட்டறிந்தார். பின்னர், ஒரு வழியாக, உணவு ஆர்டரை வாங்கிச் சென்றார்.
உணவுகளை பிக்அப் செய்ய செல்லும் சொமேட்டோ ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதை உணர்ந்த சொமேட்டோ சி.இ.ஓ., தீபீந்தர் கோயல், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை மதிக்குமாறு ஆம்பியன்ஸ் மால் உள்பட அனைத்து மால் நிர்வாகங்களுக்கும் கோரிக்கை விடுத்தார்.
அவரது இந்தப் பதிவு வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட ஆம்பியன்ஸ் மால் நிர்வாகம், உணவு பிக்அப் செய்ய வரும் ஊழியர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கித் தருவதாக உறுதியளித்தது. அதற்கு தீபீந்தர் கோயல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

