ADDED : ஏப் 01, 2025 09:58 PM

புதுடில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது வாடிக்கையாளர் சேவை பிரிவில் , 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் முன்னணியில் இருக்கும் ஸொமேட்டோவில், ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஸொமேட்டோ அசோசியேட் ஆக்சிலேட்டர் புரோகிராம் (இசட்.ஏ.ஏ.பி) பிரிவின் கீழ் 1,500 வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகிகள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், ஸொமேட்டோ நிறுவனம், வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றும் 600 பேரை பணியிலிருந்து நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நிறுவனத்தில் ஒரு வருடம் பணி முடித்த பிறகு பதவி உயர்வுக்காக காத்திருந்த இந்த ஊழியர்கள் தற்போது பணி நீக்கத்தை சந்தித்துள்ளனர்.
வாடிக்கையாளர் சேவையை தானியங்கி முறைக்கு மாற்றும் திட்டத்துடன் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

