சபரிமலை:சபரிமலையில் நேற்று நடைபெற்ற மண்டல பூஜையுடன் 41 நாட்கள் நடைபெற்ற மண்டலகாலம் நிறைவுபெற்று நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மண்டல காலத்தின் நிறைவாக நேற்று மதியம் 12:20 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக காலை 11:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது.
தொடர்ந்து 108 கலசாபிஷேகமும், களபாபிஷேகமும் நடைபெற்றது. வெள்ளி சந்தன குடத்தை மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார். தொடர்ந்து மூலவருக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தங்க அங்கி மற்றும் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
மாலை 4:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு அத்தாழ பூஜைக்கு பின் 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது.
இனி மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. டிச.,31 அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடங்கும்.