பட்டம் பெறுவதுடன் முடிந்துவிடுவதில்லை 'பொறியியல் கல்வி'
பட்டம் பெறுவதுடன் முடிந்துவிடுவதில்லை 'பொறியியல் கல்வி'
அக் 28, 2026 09:03 PM
அக் 28, 2026 09:03 PM

பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தொழிற்சாலைகளின் உற்பத்தியை அதிகரிப்பதோடு நின்றுவிடாமல், பொதுமக்களின் அன்றாட பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பொறியியல் தரநிலைகள், தொழில்நுட்ப மேம்பாடு, சான்றிதழ் மற்றும் மாணவர் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (ASME), இந்தியாவிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து ஏ.எஸ்.எம்.இ., பவுண்டேஷன் இந்தியாவின் துணை இயக்குநர் அவினி மல்கோத்ரா அளித்த சிறப்பு பேட்டி:
140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இவ்வமைப்பு, 2009ம் ஆண்டு இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. தற்போது மாணவர்களை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளித்தல், பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பு உலகம் முழுவதும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 8,568 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்காவுக்கு வெளியே அதிக உறுப்பினர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் மாணவர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் மாணவர்கள் தங்களது கல்லூரிப் பருவத்திலேயே சர்வதேசத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிந்துகொள்வதற்கும், துறை சார்ந்த நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் இத்தகைய அமைப்புகள் வாய்ப்பளிக்கின்றன. தொழில்நுட்ப கருத்தரங்குகள், பயிற்சிகள், கண்டுபிடிப்பு போட்டிகள் வாயிலாக மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது.
அறக்கட்டளையின் முயற்சிகளில் சமூக பயன்பாட்டுக்கான கண்டுபிடிப்புகள் முக்கிய இடம் பெறுகின்றன. குறைந்த செலவிலான குளிர்பதன கருவிகள், விவசாய பணிகளுக்கு உதவும் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கை போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
பொறியியலில் பெண்களின் பங்களிப்பு
பொறியியல் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஏ.எஸ்.எம்.இ., சார்பில் பெண்களுக்கான தனிப்பிரிவு செயல்படுகிறது. ஆண்டுதோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், பொறியியல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தொழில்நுட்ப அறிவுடன் தொழில்முனைவுத் திறன், தலைமைப் பண்பு, குழுவாகச் செயல்படும் திறன் ஆகியவற்றையும் வளர்ப்பது அவசியம். இதற்காக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்துறையில் முன்னேறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படுகின்றன.
சமூக முன்னேற்றத்துடன் இணையும் பொறியியல்
பொறியியல் கல்வி என்பது பட்டம் பெறுவதுடன் முடிந்துவிடுவதில்லை. சமூகத்தில் நிலவும் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குப் பயனுள்ள தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் திறனே பொறியியல் அறிவின் முக்கிய நோக்கம்.
மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான தொடர்புகள், தொழில்நுட்பப் பயிற்சிகள், கண்டுபிடிப்புப் போட்டிகள் மற்றும் உறுப்பினர் சலுகைகள் கிடைப்பது அவர்களின் திறன் வளர்ச்சிக்கு உதவும். அதேநேரத்தில், கிராமப்புற மக்களுக்கும் பொருளாதார வசதி குறைந்த பிரிவினருக்கும், பயனளிக்கும் புதுமைகளுக்கு ஆதரவு வழங்கப்படுவது தொழில்நுட்பத்தின் சமூகப் பொறுப்பை எடுத்துக்காட்டுகிறது.
தொழில்நுட்பம் என்பது வளர்ச்சிக்கான கருவி மட்டுமல்ல; மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சக்தி.
