sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நாடு முழுதும் 68,000 கோச்சிங் மையங்கள்

/

நாடு முழுதும் 68,000 கோச்சிங் மையங்கள்

நாடு முழுதும் 68,000 கோச்சிங் மையங்கள்

நாடு முழுதும் 68,000 கோச்சிங் மையங்கள்


ஆக 08, 2024 12:00 AM

ஆக 08, 2024 12:00 AM

Google News

ஆக 08, 2024 12:00 AM ஆக 08, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான கோச்சிங் சென்டர்கள் நாடு முழுதும் புற்றீசல் போல கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இவை, சட்ட விதிகளை மீறுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. அரசு நிர்வாகங்களும் மெத்தனமாக செயல்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த, கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டில்லியில் உள்ள, ராவ் ஐ.ஏ.எஸ்., கோச்சிங் சென்டரில் சமீபத்தில் மழை வெள்ளம் புகுந்து, மூன்று பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்று சில விபத்துகள் உள்ளிட்டவை நடந்துள்ள போதிலும், தற்போது, இந்தப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.

ஒரு பக்கம், கோச்சிங் சென்டர்கள் சட்டவிதிகளை மீறுவது, மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது, போதிய வசதிகள் இல்லாதது என, பல முறைகேடுகளில் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கணக்கெடுப்பு

மறுபக்கம், அரசு நிர்வாகங்கள் மெத்தனப் போக்குடன் இருந்து, இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததுடன், தடையில்லா சான்றிதழ் உள்ளிட்டவற்றை தாராளமாக வழங்கியுள்ளதும், யார் இதுபோன்ற சம்பவங்களுக்கு பொறுப்பு என்ற கேள்வியையும் எழுப்பிஉள்ளது.

கோச்சிங் சென்டர்கள் கூட்டமைப்பின் கணக்கின்படி, நாடு முழுதும், 48,000 கோச்சிங் சென்டர்கள் செயல்படுகின்றன. அதே நேரத்தில் முறையான அனுமதி பெறாமல், பல லட்சம் சென்டர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

மற்றொரு புள்ளி விபரத்தின்படி, 2024 ஜூலை, 12ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும், 68,000 கோச்சிங் சென்டர்கள் செயல்படுகின்றன. இந்தத் துறையின் தற்போதைய ஆண்டு சந்தை வருவாய், 70,000 கோடி ரூபாயாக உள்ளது. இது, 2028ல் 1.34 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கோச்சிங் சென்டர்கள் என்பது மிகப்பெரும் தொழிலாக மாறி வருகிறது.

இந்தத் துறையின் வாயிலாக, 2023 - 2024ம் நிதியாண்டில், 5,517 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ்., போன்ற யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள், டில்லியில் அதிக அளவில் உள்ளன.

அதே நேரத்தில் மும்பை, கோல்கட்டா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்கள், மத்திய, மாநில சேவைகள், சட்டம், சாட்டர்ட் அக்கவுன்டன்ட் எனப்படும் கணக்கு தணிக்கையாளர் போன்ற தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அதிகம் உள்ளன.

மருத்துவம், இன்ஜினியரிங் மற்றும் நிர்வாகவியல் படிப்புக்கான சென்டர்களுக்கு ஜெய்ப்பூர், சண்டிகர், கோட்டா, புனே போன்ற நகரங்கள் புகழ்பெற்றுள்ளன.

போட்டி தேர்வுகள் எழுதுவதற்கான போட்டி அதிகரித்துள்ளதே, கோச்சிங் சென்டர்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உதாரணத்துக்கு, யு.பி.எஸ்.சி., நடத்தும் முதல் நிலை தேர்வை, 2007ல், 3.33 லட்சம் பேர் எழுதினர். இந்த எண்ணிக்கை, 2023ல், 13 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தேர்ச்சி விகிதம், 0.2 சதவீதமாக உள்ளது தனிக்கதை.

நடைமுறை

புற்றீசல் போல கோச்சிங் சென்டர்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கென தனியாக எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஹரியானா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பீஹார் போன்ற மாநிலங்களில், கோச்சிங் சென்டர்களுக்கான சில விதிகள் நடைமுறையில் உள்ளன. மஹாராஷ்டிரா இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நாட்டிலேயே கோவாவில்தான் முதல் முறையாக, 2004ல் கோச்சிங் சென்டர்களை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2017ல் விரிவான சட்டம் அமல்படுத்தப்பட்டு, அது, 2022ல் திருத்தப்பட்டது.

இந்நிலையில், கோச்சிங் சென்டர்களுக்கான நடைமுறைகள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை, இந்தாண்டு ஜனவரியில், 11 பக்க வழிமுறைகளை வெளியிட்டது. இதன்படி, கோச்சிங் சென்டர்களில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும், என்னென்ன சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலான கோச்சிங் சென்டர்கள் இவற்றை பின்பற்றவில்லை என்பதே உண்மை. டில்லி சம்பவத்தைத் தொடர்ந்து, கோச்சிங் சென்டர்களுக்கு கடிவாளம் போடும் வகையில், விரிவான நடைமுறைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில், அந்தந்த மாநிலங்கள் அவற்றை செயல்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us