ஏப் 02, 2024 12:00 AM
ஏப் 02, 2024 12:00 AM
இன்றைய காலகட்டத்தில், வேலை வாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வில் மதிப்பெண்களை விட, ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பவர் பி.ஐ., டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா உட்பட நவீன தொழில்நுட்ப திறன்களே அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. எந்த ஒரு துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும், கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப அறிவு வேலைவாய்ப்பிற்கு பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன.
முன்பு, மைக்ரோசாப்ட்-எக்ஸ்எல் தெரிந்திருந்தாலே போதுமானது; ஆனால் இன்று அதில் ஆழமான அறிவும், மதிப்புமிக்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழும் எதிர்பார்க்கப்படுகின்றன. முன்பு, ஒரு மார்க்கெட்டிங் மேலாளருக்கு அவரது துறை சார்ந்த அறிவும், அனுபவமும் மட்டும் போதுமானதாக இருந்தது. இன்று நிதி, தொழில்நுட்பம் என இதர துறை சார்ந்த அறிவும் முக்கியத்துவம் பெருகின்றன.
தகவல்களை ஆராயுங்கள்
எந்த ஒரு சிறிய தகவலை ஆன்லைன் வாயிலாக இன்று தேடினாலும், அது சார்ந்த ஏராளமான தகவல்கள் நம் கண்முன்னே வந்து குவிகின்றன. ஆனால், அத்தகைய தகவல்களின் உண்மைத்தன்மை பரிசோதிக்கப்படவில்லை. நாளிதழ்கள் மற்றும் புத்தகங்களில் வெளியாகும் சிறு தகவல்கள் மற்றும் செய்திகள் கூட பரிசோதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு தகவலின் உண்மைத்தன்மை மதிப்பிடப்படுகின்றன. ஆகவே, தகவல்களுக்கு இன்று பஞ்சமில்லை; உண்மையான தகவல்களை நாம் நுகர்கிறோமா என்பதே முக்கியம். குறிப்பாக, டிஜிட்டலில் பெறப்படும் எந்த ஒரு தகவலையும் ஆராயாமல் நம்பிவிடக்கூடாது.
இத்தகைய சூழலில், தகவல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் சார்ந்த பணிகளுக்கும் இன்று அதிக தேவை உள்ளது. பணியிலும் எந்த ஒரு சூழலிலும் ஒரு தகவல்களை வெளிப்படுத்தும்முன்பு, அவற்றின் உண்மைத்தன்மையை மதிப்பிட்டு ஆராய்ந்திருக்க வேண்டும்.
அப்போது தான் உங்கள் மீதான மதிப்பு உயரும். எதிர்கால இன்ஜினியர்கள், மேனேஜர்கள், சட்ட வல்லுநர்கள், நிதித்துறை நிபுணர்கள் அனைவரும் சமகால சவால்களுக்கு புதுமையான தீர்வை அளிக்கும் திறன் பெற்றிருந்தாலே நிலைத்திருக்க முடியும். டிசைன் திங்கிங் மற்றும் கிரிட்டிக்கல் திங்கிங் திறன் ஆகியவை அனைவருக்கும் அவசியமாகிறது.
தொழில்துறை ஆய்வு, கல்வி சார்ந்த ஆய்வு என இரண்டு வகையான ஆராய்ச்சியும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமானது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, பார்மாசூட்டிக்கல் துறை மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்களிடம் ஆராய்ச்சி சார்ந்த ஆர்வத்தை அதிகரிக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
-டாக்டர் சித்தார்த்தா கோஷ், இயக்குனர், என்.எம்.ஐ.எம்.எஸ்., ஹைதராபாத்.