தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கல்பாக்கத்தில் நிகழ்ந்த மாபெரும் சாதனை!

கல்பாக்கத்தில் நிகழ்ந்த மாபெரும் சாதனை!

கல்பாக்கத்தில் நிகழ்ந்த மாபெரும் சாதனை!


ஏப் 10, 2026 11:31 AM

ஏப் 10, 2026 11:31 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 10, 2026 11:31 AM ஏப் 10, 2026 11:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை அருகே, கல்பாக்கத்தில் உள்ள நம் நாட்டின் முதல் 'ப்ரோடோடைப் பாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர்' எனப்படும் மாதிரி அதிவேக ஈனுலை, கடந்த ஏப்ரல் 6ம் தேதி இரவு, இயங்கத் தொடங்கும் 'க்ரிடிகாலிடி' எனப்படும் உய்ய நிலையை எட்டியது. 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த ஈனுலை செயல்பட தொடங்கியதும், இந்தியாவின் மூன்று கட்ட சுயசார்பு அணு ஆற்றல் கொள்கையின் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக அடைந்துவிட்டோம். நமது நாட்டின் அணுசக்தி பயணத்தில் இது மிக முக்கியமான மைல்கல்.

உய்யநிலை என்றால் என்ன?

அறுவை சிகிச்சை முடித்து வெளியே வரும் மருத்துவர், நோயாளியின் நிலைமை 'க்ரிடிக்கல்' என்றும், 'அடுத்த 24 மணி நேரம் பார்த்துவிட்டுத் தான் எதையும் சொல்ல முடியும்' என்றும் சொன்னால், நோயாளியின் நிலை ஆபத்தானது, உயிர் ஊசலாடுகிறது என்று பொருள்.

ஆனால் அணு உலையில் 'க்ரிடிகாலிடி' ஏற்பட்டுவிட்டது என்றால், உலைக்கு உயிர் வந்துவிட்டது என்று பொருள். 'க்ரிடிகாலிடி' என்பது அணுசக்தி துறையில் புழங்கும் ஒரு கலைச்சொல்.

ஒரே ஒரு வைக்கோலை எடுத்து, அதன் முனையில் தீயைப் பற்றவையுங்கள். தீ பிடிக்கும், ஆனால் விரைவில் தானே அடங்கிவிடும். தொடர்ந்து எரியாது. பல வைக்கோல் புற்களை இறுக்கமாக சுற்றி, தீயை மூட்டுங்கள். வைக்கோல் முழுதும் எரிந்து சாம்பலாகும் வரை, தீ தொடர்ந்து எரியும்.

விறகடுப்பைப் பற்ற வைப்பதற்கும் இப்படித் தான் தீ மூட்ட வேண்டும். முதலில் சிறு பொறியாகத் தீ பற்றும். பின்னர் அதில் எளிதில் எரியக்கூடிய பேப்பர் போன்றவற்றை போட்டு தீயை மூட்டுவோம். இந்த நிலையில் விறகுகளை ஒவ்வொன்றாக அடுக்கினால், தீ தொடர்ந்து எரியும்.

இப்படி தான், அணு உலையிலும் அதன் எரிபொருள் தண்டுகளை விறகு போல ஒவ்வொன்றாக அடுக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட வடிவத்தில் அடுக்கினால் மட்டுமே அணு உலையில் தொடர் அணு வினை ஏற்படும். தொடர் அணு வினையே, 'க்ரிடிகாலிடி' எனும் உய்யநிலை.

செங்கல் சூளையில் விறகை முறையாக அடுக்கினால் தான் குறைந்த விறகைப் பயன்படுத்தி அதிக ஆற்றலைப் பெற முடியும். அதே போல் தான், அணு உலையிலும். எரிபொருள் தண்டுகளை எப்படி அடுக்க வேண்டும் என்று கணிக்க வேண்டும்.

அது, அணு உலை அறிவியலில் மிக முக்கியமான நுணுக்கமான ஒன்று. அப்படி கணித்த பின், மார்ச் 04, 2024 அன்று, கல்பாக்கத்தில், 'கோர் லோடிங்' எனப்படும் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்பட்டது.

இதை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆனது! கடந்த ஏப்ரல் 6, 2026 அன்று தான் முடிந்தது. அதன் பின், அணு உலையின் உள்ளே, எந்த வித புறத்துாண்டலும் இல்லாமல், தொடர்ச்சியான அணு வினை ஏற்பட்டுவிட்டது. அதாவது, உய்யநிலை வெற்றிகரமாக எட்டப்பட்டது.

இது, மிகப்பெரிய அறிவியல், தொழில்நுட்ப, கட்டுமான சாதனை. அரசின் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் பாரதிய நபிகியா வித்யுத் நிகம் லிமிடெட் (பாவினி) என்னும் பொதுத்துறை நிறுவனம், 200க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்போடு இந்த சாதனையை செய்துள்ளது.

பல நாடுகளில் அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், கல்பாக்கத்தில் நடந்ததை ஏன் சாதனையாக கருத வேண்டும்? அதை புரிந்துகொள்ள இந்த திட்டம் கடந்து வந்த பாதையையும், அதன் தனித்துவமான தொழில்நுட்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

யுரேனியம்


ஊதா கத்தரிக்காய், வெள்ளை கத்தரிக்காய், பச்சை கத்தரிக்காய் என, பல வகை கத்தரிக்காய் இருப்பதைப் போல, பல தனிமங்களும் பல்வேறு ஐசோடோப்பு எனும் ஓரகத்தனிமங்களாக இருக்கும். அணுசக்தி உற்பத்திக்கு தேவைப்படும் யுரேனியத்தை எடுத்துக் கொண்டால், அதில் யுரேனியம்-234, யுரேனியம்-235, யுரேனியம்-238 முதலிய ஓரகத்தனிமங்களின் கலவையாக இருக்கும்.

இவற்றில் யுரேனியம்-235 என்னும் ஓரகத்தனிமம் இயற்கைக் கதிரியக்கத் தன்மை கொண்டது. அது தானாகவே திடீரென்று ஆல்பா துகளைத் துப்பி, தோரியம்-231 என்னும் ஓரகத்தனிமமாக மாறிவிடும். இது போன்ற இயற்கை கதிரியக்க தன்மை கொண்ட ஓரகத்தனிமங்களின் அணுக்கருவின் மீது, சரியான வேகத்தில் புதிய நியூட்ரான் ஒன்றைச் செலுத்தினால், அந்த அணுக்கரு உடையும். அணுக்கரு பிளந்து ஆற்றல் வெளிப்படும்.

இயற்கை கதிரியக்கத் தன்மை கொண்ட ஓரகத்தனிமங்களே அணு உலை எரிபொருளாகும். யுரேனியம்-233, யுரேனியம்-235, புளூட்டோனியம்-239 ஆகிய மூன்று ஓரகத்தனிமங்கள் மட்டுமே அணு உலைகளில் எரிபொருளாக பயன்படுகின்றன.

இவை நம் நாட்டில், இயற்கையாக நிறைய கிடைத்தால் எந்த பிரச்னையும் இல்லை. அவற்றை நேரடியாக பயன்படுத்தி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போல நாமும் சாதாரணமாக அணு வினை முறையில் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால், நம் நாட்டில் யுரேனியம் மிக மிக குறைவாக கிடைக்கிறது. கிடைக்கும் யுரேனியத்தின் தரமும் குறைவு.

நாம் அணு உலை எரிபொருளுக்கு மற்ற நாடுகளை சார்ந்துள்ள நிலை உள்ளது. சர்வதேச அரசியல் காரணங்களால், நமக்கு இவை எளிதில் கிடைக்காத நிலை உள்ளது. தற்போது, ஈரான் போரினால், எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது அல்லவா... அது போல தான் அணு உலை எரிபொருள் தட்டுப்பாடும். அதனாலேயே நம் நாட்டில் அணுசக்தி உற்பத்தியை விரைவாக விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது.

மாற்று வழி


இந்த பிரச்னையை சமாளிக்க மாற்று வழி யோசித்த நம் நாட்டு விஞ்ஞானிகள், இயற்கையாக கதிரியக்கம் இல்லாத ஓரகத்தனிமங்களை, கதிரியக்கம் உள்ள ஓரகத்தனிமங்களாக மாற்றும் உத்தியை வகுத்தனர். அதன்படி தான் ஈனுலை திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த உலைகள், மின்சாரம் உற்பத்தி செய்வதோடு, கதிரியக்கம் உள்ள ஓரகத்தனிமங்களை 'ஈனும்!'

பொதுவாக மின் உற்பத்தி ஆலைகளில், எரிபொருளை உள்ளீடு செய்து ஆற்றலை உற்பத்தி செய்வர். அந்த ஆற்றல் மின்சாரமாக மாற்றப்படுகிறது. நிலக்கரி ஆலை என்றால், நிலக்கரியை எரித்து ஆற்றல் உற்பத்தி செய்யப்படும்.

அதன் விளைவாக, சாம்பல் கழிவு வெளியேறும். யுரேனியத்தை பயன்படுத்தும் அணுசக்தி ஆலைகளில், யுரேனியம் கழிவு உருவாகும். மாறாக, ஈனுலைகளில், புதிய அணு ஆற்றல் எரிபொருள், 'கழிவாக' உருவாகும். அதாவது, ஈனுலைகள், கூடுதல் எரிபொருளை உற்பத்தி செய்கின்றன.

பச்சை மரக்கிளை எரியாது, எரிபொருளாகப் பயன் தராது. ஆனால் அடுப்பின் சூட்டில் வைத்து பச்சை மரத்தை விறகாக மாற்றிவிடலாம் அல்லவா? அது போல, இயற்கை கதிரியக்கமற்ற சில ஓரகத்தனிமங்களை, கதிரியக்க தனிமங்களாக மாற்றிவிடலாம்; இது ஈனுலையின் வேலை.

சாமி சிலைகளுக்கு சந்தன காப்பு செய்வதை போல, அணு உலை கலத்துக்கு வெளியே, அணு எரிபொருளாக மாற்றம் அடையக்கூடிய பொருளை அடுக்கு போல பூசிவிடுவர்.

கல்பாக்கம் மாதிரி ஈனுலையில், அணு உலை எரிபொருளாக பயன்தராத யுரேனியம்-238ஐ உலையின் மீது பூசுவர். உலையின் உள்ளே அணு வினை ஏற்படும் போது, அணுவின் மூலக்கூறு பிளவுபட்டு நியூட்ரான்கள் வேகமாக வெளியேறும்.

சாதாரண அணு உலைகளில், இந்த நியூட்ரான்களின் வேகத்தை மட்டுப்படுத்துவர். ஆனால், ஈனுலையில், அவற்றின் வேகத்தை குறைப்பதில்லை. மாறாக, அவற்றை யுரேனியம்-238 பூச்சின் மீது மோத விடுவர். அப்போது, யுரேனியம்-238 நியூட்ரான்களை விழுங்கி, கதிரியக்கம் உள்ள ஓரகத்தனிமமான புளூட்டோனியம்-239 ஆக மாறிவிடும்.

முழு வீச்சில் செயல்பட்டால் ஆண்டுக்கு, 140 முதல் 150 கிலோ புளூட்டோனியம்-239 கிடைக்கும். இதை, சாதாரண அணு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

எதிர்காலத்தில், தோரியம்-232 என்ற ஓரகத்தனிமம், பூச்சாகப் பயன்படும். இது யுரேனியம்-233 என்னும் அணு எரிபொருளாக மாறும்.

நம் நாட்டில் தான் உலகிலேயே மிக அதிகமாக தோரியம் கிடைக்கிறது. கேரளா, கன்னியாகுமரி கடற்கரை மணலில் தோரியம் அபரிமிதமாக உள்ளது.

எனவே, ஈரப்பசை கொண்ட பச்சை விறகு போன்ற தோரியத்தை ஈனுலையில் இட்டு, யுரேனியம்-233 என்னும் அணு எரிபொருளாக மாற்றினால், வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டியதில்லை என்று, நம் நாட்டின் முன்னோடி அணு விஞ்ஞானியான ஹோமி பாபா கருதி, மூன்று அடுக்கு அணு உலைத் திட்டத்தைத் தீட்டினார்.

-த.வி.வெங்கடேஸ்வரன், வருகை பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹால.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us