/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மாற்றத்தை ஏற்படுத்தும் ஏ.ஐ.,!
/
மாற்றத்தை ஏற்படுத்தும் ஏ.ஐ.,!
ஜூலை 28, 2025 12:00 AM
ஜூலை 28, 2025 12:00 AM

இன்றைய வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியில், மனித குழப்பங்களை குறைத்து, துல்லியமான முடிவுகளை எடுக்க உதவும் நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங்.
ஏ.ஐ., மற்றும் எம்.எல்., நுட்பங்கள் இன்று வங்கி, மருத்துவம், விவசாயம், வணிகம், பாதுகாப்பு, கல்வி, மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குரல் அடையாளம், முகம் அடையாளம் காணும் கணினிகள், வாடிக்கையாளர் சேவை 'சாட்பாட்'கள், டிஜிட்டல் உதவியாளர்கள், தானியங்கி வாகனங்கள் என பயன்பாடுகள் எண்ணற்றவை. தொழில்களில் மனித ஊழியர்களின் வேலை எளிமைப்படுத்துவதில் இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
இளநிலை படிப்பு
ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் அல்லது மெஷின் லெர்னிங் என்ற துறையில் பி.டெக்., / பி.இ., படிப்புகள் தற்போது பல கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. படிப்பு காலம் 4 ஆண்டுகள். மாணவர்கள் பிளஸ் 2 படிப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் கணினி சார்ந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள்
இந்தியாவில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி.,- பெங்களூரு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏராளமான தனியார் கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகின்றன.
வேலை வாய்ப்புகள்
தரவு விஞ்ஞானி, ஏ.ஐ., -பொறியாளர், இயந்திர கற்றல் பொறியாளர், என்.எல்.பி.,- பொறியாளர், ஆராய்ச்சி விஞ்ஞானி, வணிக நுண்ணறிவு உருவாக்குனர் ஆகிய பணி வாய்ப்புகளை பெறலாம். கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா, இன்போசிஸ், ஹெச்சிஎல், ஐபிஎம், போன்ற முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பு பிரகாசம்.
எதிர்கால வளர்ச்சி
2030க்குள் உலகளவில் பெரும்பாலான தொழில்கள் செயற்கை நுண்ணறிவு வழியே இயங்கும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேட்டர்டு வாகனங்கள், கல்வி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகள், ஏ.ஜி.ஐ.,-செயற்கை பொது நுண்ணறிவு என பல புதிய அம்சங்கள் உருவாகி வருகின்றன. இதனால் இந்த துறையின் வளர்ச்சி பன்மடங்காக இருக்கும் என நம்பப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் என்பது இன்று தேவை மட்டுமல்ல, எதிர்காலத்தின் தூணாகும். நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இந்த துறையை தேர்வு செய்வது, அவர்களது வாழ்க்கையை உயர்த்தும் ஒரு தீர்மானமான பயணம்.