ஜன 11, 2025 12:00 AM
ஜன 11, 2025 12:00 AM

நாடு முழுவதிலும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, ஏ.ஐ.எஸ்.எஸ்.இ.இ., எனும் 'அனைத்து இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு' வாயிலாக நடைபெறுகிறது. மத்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்துகிறது.
முக்கியத்துவம்
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் எஸ்.எஸ்.எஸ்., எனும் 'சைனிக் ஸ்கூல்ஸ் சொசைட்டி', சைனிக் பள்ளிகளை நடத்துகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நேஷனல் டிபன்ஸ் அகாடமி -என்.டி.ஏ., இந்தியன் நேவல் அகாடமி - ஐ.என்.ஏ., மற்றும் இதர பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
படிப்புகள்:
சைனிக் பள்ளிகளில் ஆறாம் மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
தகுதிகள்:
ஆறாம் வகுப்புகளில் சேர்க்கை பெற மார்ச் 31, 2025ம் தேதி நிலவரப்படி 10 முதல் 12 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கை பெற 13 முதல் 15 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். காலியிடங்களை பொறுத்து ஒன்பதாம் வகுப்பில் மட்டும் மாணவிகள் சேர முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://aissee2025.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
ஏ.ஐ.எஸ்.எஸ்.இ.இ., தேர்வில் 'மல்டிபில் சாய்ஸ்' வடிவில் கேள்விகள் இடம்பெறும். ஆறாம் வகுப்பிற்கு 150 நிமிடங்களும், ஒன்பதாம் வகுப்பிற்கு 180 நிமிடங்களும் தேர்வு நடைபெறும். ஆறாம் வகுப்பிற்கான தேர்வில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 13 மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். ஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும்.
நுழைவுத் தேர்வில் மாணவ, மாணவிகள் பெறும் மதிப்பெண் மற்றும் இதர தகுதிகள் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 40 புதிய சைனிக் பள்ளிகள் உட்பட 73 சைனிக் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதிலும் 190 முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
விபரங்களுக்கு:
https://exams.nta.ac.in/AISSEE/