sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரிட்டனில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் திட்டங்கள்

/

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரிட்டனில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் திட்டங்கள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரிட்டனில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் திட்டங்கள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரிட்டனில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் திட்டங்கள்


மார் 14, 2014 12:00 AM

மார் 14, 2014 12:00 AM

Google News

மார் 14, 2014 12:00 AM மார் 14, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயர்தர வர்க்க மாணவர்களைத் தவிர்த்து, வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மேல் மத்தியதர வர்க்கத்தினருக்கு பல சமயங்களில் பொருளாதார சிக்கல்கள் எழுகின்றன. அதுபோன்ற சூழல்களில், அவர்களுக்கு உதவித்தொகை திட்டங்கள்தான் ஒரே தீர்வு.

வெளிநாட்டுப் படிப்பில் உதவித்தொகைகளைப் பெறுவதற்கான பலவிதமான முறைகள் உள்ளன. உதவித்தொகைகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களாலோ, அந்தந்த மாநில அல்லது மத்திய அரசாலோ, தனி நபர்களாலோ, தனியார் அல்லது பொது அல்லது தனியார் - பொது கூட்டிணைப்பு நிறுவனங்களாலோ வழங்கப்படலாம்.

இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு, உலகின் பல பல்கலைக்கழகங்கள் உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஆனாலும், பல மாணவர்களுக்கு உதவித்தொகைகள் பற்றிய விபரங்கள் தெரிவதில்லை. இக்கட்டுரையில், வெளிநாட்டு மாணவர்களுக்காக, பிரிட்டனில் வழங்கப்படும் சில பிரபல உதவித்தொகை விபரங்கள் பற்றி அலசப்படுகிறது.

டாக்டர்.மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப்

படிப்பில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்களுக்கு, டாக்டர்.மன்மோகன்சிங் பிஎச்.டி உதவித்தொகைகளை, கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் செயின்ட் ஜோசப் கல்லூரி வழங்குகிறது. இதைப் பெற விரும்புவோர், 35 வயதுக்கு உட்பட்டவராகவும், மேற்கண்ட கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஒன்றுள் பிஎச்.டி., ஆய்வை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

அந்தந்த ஆண்டு செப்டம்பர் / அக்டோபர் மாத செஷனுக்கு, அந்த ஆண்டின், ஜனவரி மாதம் நடுவில், இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், தன்னில் இளநிலைப் படிப்பில் சேரவிரும்பும் இந்திய மாணவர்களுக்கு டாக்டர்.மன்மோகன்சிங் இளநிலை பட்ட உதவித்தொகையை வழங்குகிறது.

காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்

காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, காமன்வெல்த் உதவித்தொகை மற்றும் பெல்லோஷிப் ஆகியவற்றை காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் வழங்குகிறது. பிரிட்டனில் படிப்பை முடித்தப் பின்னர், தங்களின் சொந்த நாட்டிற்கு மாணவர்கள் சிறப்பாக பங்களிக்கும் நோக்கத்திற்காக இது வழங்கப்படுகிறது.

6 மாதகாலம் கிளினிக்கல் பயிற்சி, ஓராண்டு முதுநிலைப் படிப்பு அல்லது மூன்றாண்டுகள் வரையிலான டாக்டோரல் படிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் காலகட்டம், ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக, ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கி, அக்டோபர் முதல் வாரம் வரையிலானதாகும்.

Charles Wallace India Trust ஸ்காலர்ஷிப்

தகுதியுள்ள இந்திய மாணவர்களின் படிப்பின்போதான ஆரம்பகட்ட அல்லது நடுப்பகுதியில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையின் மூலம் ஒரு மாணவர், பிரிட்டனில் தங்கியிருந்து, கலை, கல்வி மற்றும் புரபஷனல் லட்சியங்களில் சாதிக்க முடிவதோடு, தங்களுக்கான சர்வதேச தொடர்புகளையும் விரிவாக்கிக் கொள்ள முடியும்.

Charles Wallace India Trust  உதவித்தொகையின் கீழ் வரும் பல்வேறான சலுகைகளின் விபரங்கள்

* பிரிட்டனில் இறுதியாண்டு டாக்டோரல் படிப்பின்போதான உதவிகள்

* விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம் அல்லது இதர கல்வி நிறுவனங்களில் அருங்காட்சியகப் பொறுப்பாளர் பணி.

* ஸ்காட்டிஷ் பல்கலைகளின் சர்வதேச கோடைகால வகுப்புகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, எடின்பர்க் நகரில் தங்கியிருப்பதற்கான வாழ்க்கைச் செலவினங்கள், கலந்து கொள்வதற்கான கட்டணங்கள் ஆகியவற்றுக்கான உதவித்தொகை

உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உண்டு.

ஹார்ன்பி(Hornby) ஸ்காலர்ஷிப்

ஹார்ன்பி கல்வி அறக்கட்டளை இந்த உதவித்தொகையை வழங்குகிறது. ஆங்கில மொழி கற்பித்தல் தொடர்பான படிப்பில் ஒரு ஆண்டு முழுநேர முதுநிலைப் படிப்பை பிரிட்டனில் மேற்கொள்ள இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் சொசைட்டி ஆப் இந்தியா ஸ்காலர்ஷிப்

30 வயதுக்கு மிகாத, கேம்ப்ரிட்ஜ் அல்லது ஆக்ஸ்போர்டு பல்கலைகளில், ஏதாவதொரு பாடத்தில், இளநிலை, இரண்டாம் இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள விரும்பும் திறன்வாய்ந்த இந்திய மாணவர்களுக்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை வழங்குவதுதான் இந்த உதவித்தொகையின் நோக்கம்.

இந்த உதவித்தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் காலகட்டம் பொதுவாக, பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையாகும்.

இன்லேக்ஸ்(Inlaks) ஸ்காலர்ஷிப்

ஏதேனும் ஒரு துறையில் நல்ல திறமை பெற்ற இளம் இந்திய மாணவர்கள், பல்கலைக்கழக படிப்பின் மூலமாகவோ அல்லது ஆராய்ச்சி, பயிற்சி அல்லது புரபஷனல் மேம்பாடு ஆகியவற்றின் மூலமாக தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கு இன்லேக்ஸ் உதவித்தொகை நல்ல பயனை அளிக்கும்.

இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

பெலிக்ஸ்(Felix) ஸ்காலர்ஷிப்

இந்தியா மற்றும் இதர குறிப்பிட்ட வளரும் நாடுகளின் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள், ஆக்ஸ்போர்டு பல்கலை, ரீடிங் பல்கலை அல்லது ஸ்கூல் ஆப் ஓரியன்டல் மற்றும் ஆப்ரிகன் ஸ்டடீஸ் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ள விரும்பினால், பெலிக்ஸ் உதவித்தொகையைப் பெறலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்த உதவித்தொகையை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

ஸ்காட்லாந்தின் சால்டைர்(Saltire) ஸ்காலர்ஷிப்

ஸ்காட்லாந்திலுள்ள ஏதேனுமொரு உயர்கல்வி நிறுவனத்தில், முழுநேர இளநிலை, முதுநிலை அல்லது பிஎச்.டி., படிப்புகளை மேற்கொள்வோருக்கு, ஓராண்டு டியூஷன் கட்டணத்தை ஈடுசெய்வதற்காக வழங்கப்படுவதுதான் இந்த சால்டைர் உதவித்தொகை.

கனடா, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்து, கிரியேடிவ் தொழில்துறை, லைப் சயின்சஸ், டெக்னாலஜி, பைனான்சியல் சர்வீஸ் மற்றும் புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய ஆற்றல் ஆகிய துறைகளில் படிப்புகளை மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பொதுவாக, இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசித் தேதி மே 30.

த கேட்ஸ்(Gates) கேம்ப்ரிட்ஜ் உதவித்தொகை

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முழுநேர முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள நினைக்கும் திறன்வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் முழுத் தொகையைக் கொண்ட உதவித்தொகை திட்டமாகும் இது.

இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள், பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி, டிசம்பர் தொடக்கம் வரை கிடைக்கும்.

த ரோட்ஸ்(Rhodes) ஸ்காலர்ஷிப் இந்தியா

ஆக்ஸ்போர்டு பல்கலையில் படிக்கும் திறன்வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்பான முறையில் உதவக்கூடிய ஒரு முதுநிலை அளவிலான உதவித்தொகைதான் ரோட்ஸ் உதவித்தொகை. 18 முதல் 28 வயதுக்குள் இருக்கும் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

இதைப் பெற விரும்புவோர், நல்ல புத்தி சாதுர்யம், சீரிய நடத்தை, தலைமைத்துவப் பண்பு, சேவையாற்றுவதற்கான நோக்கம் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலகட்டம் ஒவ்வொரு ஆண்டின் வசந்தகாலம் மற்றும் கோடைகாலம்.

எராஸ்மஸ் முண்டஸ் - உதவித்தொகைகள் மற்றும் அகடமிக் ஒத்துழைப்பு

குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள், ஐரோப்பிய பல்கலைகளின் குழுமத்தில் கூட்டு முதுநிலைப் படிப்பு அல்லது டாக்டோரல் படிப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பை, எராஸ்மஸ் முண்டஸ் - உதவித்தொகைகள் மற்றும் அகடமிக் ஒத்துழைப்பு வழங்குகிறது.

இதைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள், முந்தைய ஆண்டின் இறுதி மாதங்கள் அல்லது ஜனவரியில் கிடைக்கும்.

செவனிங்(Chevening) யு.கே. அரசு ஸ்காலர்ஷிப்

இது பிரிட்டன் அரசாங்கத்தின் உலகளாவிய உதவித்தொகை திட்டமாகும். வெளிநாட்டு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் மற்றும் பங்குதாரர் நிறுவனங்களால் இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. நல்ல தலைமைத்துவ பண்பும், பிரிட்டனில் முதுநிலைப் படிப்பும் மேற்கொள்ள விரும்பும் திறமை வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில்(அடுத்தாண்டு வழங்கப்படும் படிப்பிற்காக) வழங்கப்படுகின்றன.

ராயல் சொசைட்டி கிராண்ட்ஸ்

ராயல் சொசைட்டி என்பது பிரிட்டனின் தேசிய அறிவியல் அகடமியாகும். இது உலகளவில் ஒரு புகழ்பெற்ற அமைப்பாகும். பிரிட்டனின் விஞ்ஞான சமூகத்திற்கு ஆதரவளிக்கவும், பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பல்வேறான உதவித்தொகை திட்டங்களை ராயல் சொசைட்டி வழங்குகிறது.

யு.கே. கவர்ன்மென்ட் பைனான்சியல் சப்போர்ட்

வெளிநாட்டு மாணவர்களுக்கு அவர்களுடைய நாடு, தேவை மற்றும் படிப்பில் அவர்கள் செய்த சாதனை ஆகிய அம்சங்களின் அடிப்படையில், அதிகளவிலான உதவித்தொகை திட்டங்கள் மற்றும் நிதி உதவிகளை பிரிட்டன் அரசாங்கம் வழங்குகிறது.

இதர மாணவர் ஆதரவு மற்றும் உதவித்தொகை திட்டங்கள்

மேலே கண்ட பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் தவிர, வேறுபல ஸ்காலர்ஷிப் திட்டங்களும் வெளிநாட்டு மாணவர்களுக்காக அங்கே செயல்படுத்தப்படுகின்றன. அவை, சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் வெளி ஏஜென்சிகளால் வழங்கப்படுபவை.

முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான உதவித்தொகை திட்டங்களும், பெரிய எண்ணிக்கையில் பிரிட்டனில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us