ஜூலை 16, 2025 12:00 AM
ஜூலை 16, 2025 12:00 AM

சமீபகாலமாக நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும்போது, சிறந்த கல்வி பின்புலம், முன்னணி கல்லூரியில் பட்டம் போன்றவற்றை எதிர்பார்ப்பது இல்லை. பொதுவாக, அவர்கள் நிறுவனங்களின் பணி சூழலுக்கு பொருத்தமானவர் தானா என்றே பிரதானமாக ஆராயப்படுகிறது.
குறிப்பாக, எங்கள் நிறுவனத்தில் குறிப்பிட்ட ஒரு பணிக்கான தகுதி மட்டும் ஒருவரிடம் உள்ளதா என்று மட்டுமே பரிசோதிக்கப்படுவது இல்லை. எந்த ஒரு பணிக்கு விண்ணப்பித்தாலும், அவரிடம் 16 விதமான தலைமை பண்புகள் குறித்து பரிசோதிக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே ஒருவரை எந்த பதவிக்கு பொருத்தமானவர் என்பதும் கண்டறியப்படுகிறது.
பிரமாண்டமான அளவில் சிந்திக்கக் கூடியவரா? கற்பதில் ஆர்வம் உள்ளவரா? புதியவற்றை கண்டுபிடிக்கும் திறன் படைத்தவரா? உட்பட பல்வேறு அம்சங்கள் முதலில் பரிசோதிக்கப்படுகிறது. அதன்பிறகே, டெக்னிக்கல் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எவர் ஒருவரும் புதிய மாற்றத்தை ஏற்கும் திறனும், ஆர்வமும் இருக்கும் பட்சத்தில் உயரிய நிலைக்கு எளிதில் செல்ல முடியும்.
எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பான்மையானோர் மாற்றத்திற்கு ஏற்ப தங்களை எளிதில் மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக விளங்குகின்றனர். உண்மையில் தோல்விகளை கொண்டாடுகிறோம். ஏனெனில், அதிகமான அளவில் புதியவற்றிற்கு ரிஸ்க் எடுத்து முயற்சிக்கும்போதுதான் தோல்விகள் நிகழும். வெற்றிகள் கற்றுக்கொடுப்பதைவிட, தோல்விகள் தான் அதிகம் கற்றுக்கொடுக்கிறது.
ஆகையால், புதியவற்றை முயற்சி செய்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளுதல், தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு விரைவில் அடுத்த முயற்சிக்கு தயாராதல் ஆகிய திறன்களே மிகவும் அவசியமானவை. அமேசானால் உருவாக்கப்பட்ட ஏ.ஐ., டூல்களில் அனுபவத்தை பெறுதல், ஆராய்தல், போட்டியிடுதல் ஆகியவற்றின் வாயிலாகவே கற்றுக்கொள்ள முடியும். தவிர, பயிற்சி மையத்தில் அமரவைத்து எவர் ஒருவரையும் கற்றுக்கொள்ள அமேசான் வற்புறுத்துவதில்லை; அது சரியான அணுகுமுறையும் அல்ல.
ஏ.ஐ., வருகையால் வேலை வாய்ப்பு பறிக்கப்படாது; ஆனால், ஏ.ஐ., பயன்பாட்டால் ஒவ்வொருவருடைய பொறுப்புகளும் மாறுபடும். ஏ.ஐ., வருகையால் 'கோடிங்' கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. அடிப்படை திறன்கள் என்றுமே அவசியமானவை. ஏ.ஐ., வாயிலாக 'கோடிங்' எழுத முடியும் என்றாலும், 'கோடிங்' கற்றுக்கொள்ளாமல் ஒரு இன்ஜினியரால் எவ்வாறு சவால்களை புரிந்துகொண்டு, அவற்றிற்கு உரிய தீர்வு காண இயலும். சில நேரங்களில், அதிக ஐ.க்யூ., உள்ளவர்களைவிட சராசரியான ஐ.க்யூ., உள்ளவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில், அவர்கள் மீண்டும் கற்றுக்கொள்வதில் மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதே...
அனைவரும் எளிதான முறையில் பயன்படுத்தும் வகையிலான அனுபவத்தை வழங்கவும், பிற நிறுவனங்களின் ஏ.ஐ., டூல்ஸ்களை பயன்படுத்துவதைவிட சுயமாக 'டூல்ஸ்'களை மேம்படுத்துவதையே விரும்புகிறோம். ஆகவேதான், ஏ.ஐ., டூல்ஸ் மேம்பாடுகளில் அதிக அளவு முதலீடு செய்துவருகிறோம்.
வாழ்க்கை திறன்கள், மன ஆரோக்கியம், தோல்வியில் இருந்து விரைவாக கற்றுக்கொண்டு திரும்பவும் முயற்சி செய்தல், சிந்திப்பதை சரியாக வெளிப்படுத்துதல் ஆகியவற்றை பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.
-தீப்தி வர்மா, துணை தலைவர், பி.எக்ஸ்.டி., அமேசான் ஸ்டோர்ஸ் இந்தியா மற்றும் ஜப்பான்
.