ஜன 06, 2017 12:00 AM
ஜன 06, 2017 12:00 AM
‘இந்திய சட்டத் துறையில் வல்லுனராக விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வு, ’காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’ (கிளாட்)!
முக்கியத்துவம்: நாடு முழுவதும் செயல்படும், 18 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு சட்டக்கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்பில் சேர்வதற்கு, இந்த நுழைவுத் தேர்வை எழுதுவது அவசியம். 2017-18ம் கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வை, பாட்னாவில் உள்ள சாணக்கியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
அங்கீகரிக்கும் பிரபல கல்வி நிறுவனங்கள்: நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டி (பெங்களூரு), நல்சார் பல்கலைக்கழகம் (ஹைதராபாத்), நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி (போபால்), வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஜுரிடிக்கல் சயின்சஸ் (கொல்கத்தா), நேஷனல் லா யுனிவர்சிட்டி (ஜோத்பூர்), ஹிதயத்துல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி (ராய்புர்), குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி (காந்திநகர்), டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி (லக்னோ), ராஜீவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் லா (பஞ்சாப்), சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி (பாட்னா), நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ் (கொச்சி), நேஷனல் லா யுனிவர்சிட்டி ஓடிசா (கட்டாக்), நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஸ்டடி அண்ட் ரிசர்ச் இன் லா (ராஞ்சி), நேஷனல் லா யுனிவர்சிட்டி அன்ட் ஜுடிசியல் அகாடமி (அசாம்), தாமோதரம் சஞ்சிவயா நேஷனல் லா யுனிவர்சிட்டி (விசாகப்பட்டிணம்), தமிழ்நாடு நேஷனல் லா ஸ்கூல் (திருச்சி), மகாராஷ்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி (மும்பை) மற்றும் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ‘கிளாட்’ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
இளநிலை பட்டப்படிப்புகள்: ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எல்எல்.பி., சட்டப் படிப்புகள் - பி.ஏ.எல்எல்.பி., பி.எஸ்சி.எல்எல்.பி., மற்றும் பி.காம்.எல்எல்.பி.,
தகுதிகள்: பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. தற்போது பிளஸ் 2 படிக்கும், மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு பகுதிகள்: ஆங்கில மொழி அறிவு, பொது அறிவு மற்றும் நடப்புக்கால நிகழ்வுகள், கணிதம், சட்ட அறிவு (லீகில் ஆப்டிடியூட்) மற்றும் பகுத்தாராயும் திறன் (லாஜிக்கல் ரீசனிங்) ஆகிய ஐந்து பகுதிகளில் இருந்து மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
முதுநிலை பட்டப்படிப்பு: எல்எல்.எம்.,
தகுதிகள்: குறைந்தது 55 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன் எல்எல்.பி., அல்லது ஏதேனும் ஒரு சட்ட பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
தேர்வு பகுதிகள்: அரசியலமைப்பு சட்டம், சட்டவியல் மற்றும் குற்றச்செயல்கள், குற்றவியல் சட்டம், சர்வதேச சட்டம் போன்ற பாடப் பகுதிகளில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
விரிவான தகவல்களுக்கு: www.clat.ac.in
